தடை செய்த வார்த்தைகளைத் தான் பேசுவேன்: திரிணமுல் எம்.பி., கொதிப்பு

புதுடில்லி: பார்லி.,யில் எம்.பி.,க்கள் உரை நிகழ்த்தும்போது பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியல் வெளியானது. இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்துவரும் நிலையில், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., டெரிக் ஓ பிரைன், ‛தடை செய்யப்பட்ட வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்துவேன், சஸ்பெண்ட் செய்யுங்கள்' என தெரிவித்துள்ளார்.


பார்லிமென்டின் இரு அவைகளிலும் பேசும் உறுப்பினர்கள் அவையின் மாண்புக்கு எதிரான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் அதை லோக்சபா சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவர் அவைக் குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிடலாம். இந்த நிலையில் பார்லி.,யில் எந்தெந்த வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்ற புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. வரும் 18ம் தேதி கூடவுள்ள மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து இது அமலுக்கு வருகிறது.

அதன்படி, பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய தொகுப்பில், வெட்கக்கேடு, துரோகம், ஊழல், ஒட்டுகேட்பு, கொரோனா பரப்புபவர், நாடகம், கபட நாடகம், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய் என இந்தப் பட்டியல் நீள்கிறது. இதுதான் இப்போது பெரும் விவாதமாகி உள்ளது. இது தொடர்பாக திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., டெரிக் ஓ பிரைன், ‛கூட்டத்தொடர் இன்னும் சில நாட்களில் துவங்குகிறது. பார்லி.,யில் உரை நிகழ்த்தும்போது இந்த அடிப்படை வார்த்தைகளை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என எம்.பி.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட இந்த வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்துவேன், என்னை சஸ்பெண்ட் செய்யுங்கள். ஜனநாயகத்திற்காக போராடுவோம்' என்றார்.

Comments