ஆக்கிரமிப்பு இடம் மீட்பில் சுறுசுறுப்பு: ரூ.22 கோடி மதிப்புள்ள 12 இடம் மீட்பு

 கோவை நகரைச் சேர்ந்த 15 குடியிருப்போர் நலச்சங்கங்கள் இணைந்து வைத்த கோரிக்கையை ஏற்று, ரூ.500 கோடி மதிப்புள்ள ரிசர்வ் சைட்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கும் பணியை, மாநகராட்சி கமிஷனர் துவக்கியுள்ளார். கோவை நகரில், நாளுக்கு நாள் வாகனங்களும், அதன் தொடர்ச்சியாக காற்று மாசும் அதிகரித்து வருகிறது. இதைக் குறைப்பதற்கு, இன்னும் பல லட்சம் மரங்களை வளர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சிக்குச் சொந்தமான ரிசர்வ் சைட்களில், பூங்காக்களை அமைத்தால், அங்கு மரங்களை வளர்க்க முடியும். ஆனால் கோவை நகரில், நுாற்றுக்கணக்கான ரிசர்வ் சைட்கள், புதர் மண்டியும், ஆக்கிரமிப்பிலும் உள்ளன.


2011ல், மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டபோது, மொத்தம் 1400 ரிசர்வ் சைட்கள் இருப்பதாக, மாநகராட்சி இணையதளத்தில் பட்டியலும் வெளியிடப்பட்டது. அப்போதே, 150 இடங்கள், ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பத்தாண்டு கடந்த பின்பும், இவற்றில் பெரும்பாலான இடங்கள் மீட்கப்படவே இல்லை.

இத்தகைய பொது ஒதுக்கீட்டு இடங்களில்தான் பூங்கா, மைதானம், சமுதாயக்கூடம் அமைக்க முடியும். கடந்த சில ஆண்டுகளாக நகர் நல மையம், குடிநீர்த் தொட்டி, குப்பை மாற்று நிலையங்களும் இந்த இடங்களில் விதிகளை மீறி கட்டப்படுகின்றன. எனவே, பொது ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தையும் மீட்க வேண்டிய பொறுப்பு, மாநகராட்சி நிர்வாகத்துக்கு உள்ளது.

ஆனால் 2011ல் கமிஷனராக அன்சுல் மிஸ்ரா இருந்தபோதும், துணை கமிஷனராக சிவராசு இருந்தபோதும் சில இடங்கள் மீட்கப்பட்டதே தவிர, மற்ற அதிகாரிகள் யாரும் இதில் பெரிதாக அக்கறை காட்டவில்லை. கோர்ட் உத்தரவின்படியே, சில இடங்களை மீட்டனர். கோவையில் இந்த இடங்களை மீட்க, குடியிருப்போர் நலச்சங்கங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றன.

Comments