இருக்கும் இடம் தெரியாமல் போவீர்கள்! சீமான் எச்சரிக்கை

இருக்கும் இடம் தெரியாமல் போவீர்கள்!

ஏ.எம்.ஏ.ராஜேந்திரன், காளையார் கோவில், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: ராஜிவ் கொலையாளி களான, நளினி உள்ளிட்டோரை, வேலுார் சிறையில் சந்தித்தவர்கள், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலும், அவரது சகோதரி பிரியங்காவும் தான். 'என் அப்பாவை கொன்றவர்களை நான் மன்னித்து விட்டேன்' என்று ராகுல் கூறியிருந்தார்.

இதற்கு சீமான், 'மன்னிப்பதற்கு ராகுல் யார்?' என்று கேள்வி கேட்டிருக்கிறார். மன்னிப்பதற்கும் ஒரு மனம் வேண்டும். தமிழகத்தில், எத்தனையோ அரசியல் கட்சிகள் உள்ளன. இவர்கள் யாரும் ராகுல் சொன்னது பற்றி, எந்தக் கருத்தும் தெரிவிக்க வில்லை; குறை கூறவும் இல்லை. நாம் தமிழர் என்ற கட்சியின் தலைவரான சீமான் மட்டும், எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல பேசுகிறார். சீமான் குறை கூறாத அரசியல் கட்சிகளோ, தலைவர்களோ கிடையாது.

இவருக்கு பிடித்தவர் விடுதலை புலிகளின் தலைவர் மறைந்த பிரபாகரன் தான். தேர்தலில் நிற்பது தமிழகத்தில்; ஓட்டு கேட்பது தமிழக மக்களிடத்தில்; ஆனால், அரசியல் பேசுவது, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலை புலிகள் பற்றித் தான். தேர்தல் நேரத்தில், சீமான் கட்சி வேட்பாளர்களுக்கு, இலங்கை தமிழர்களோ, ஈழத் தமிழர்களோ ஓட்டுப் போடப் போவதில்லை; தமிழகத்தில் வசிப்பவர்கள் தான் ஓட்டுப் போடுகின்றனர்.

அதுபற்றி அவருக்கு தெரிவதே இல்லை. தமிழகத்தில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் எத்தனையோ உள்ளன; அதைப் பற்றி எல்லாம் சீமான் பேசுவதே இல்லை. அய்யா, சீமான் அவர்களே... அரசியலே ஒரு சாக்கடை; அந்த அரசியலில் உள்ள நீங்கள் உட்பட யாரும் புனிதர் அல்ல. அந்தச் சாக்கடையில் கல்லெறிந்து, அது உங்கள் மீதும் பட்டு, நாற்றம் எடுக்க வேண்டாம். மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பற்றி வேண்டுமென்றே குறை சொல்வதை விடுத்து, உங்களது கட்சியின் தொண்டர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருங்கள். நம் நாடு ஜனநாயக நாடு; எழுத்துரிமை, பேச்சு உரிமை, கருத்துரிமை உண்டு. அதற்காக, எந்த அரசியல் கட்சி தலைவரையும் அசிங்கப்படுத்த வேண்டாம்.வெறும் கைதட்டலுக்கு மட்டும், வீராவேசமாக பேசி அரசியல் நடத்த வேண்டாம். மக்கள் என்ற சூறாவளி சுழன்று அடிக்கத் துவங்கினால், நீங்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவீர்கள்... ஜாக்கிரதை!

'எய்ம்ஸ்' மருத்துவமனை வரும்... ஆனா வராது!


என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதுரை தோப்பூரில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை கட்ட, 2019ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதுவரை மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் மட்டுமே எழுப்பப்பட்டுள்ளது. மற்றபடி எந்தக் கட்டடமும் கட்டப்படவில்லை. இதற்கு காரணம், மத்திய அரசா, மாநில அரசா என்ற பட்டிமன்றம் மட்டும் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.


சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், கச்சத்தீவை மீட்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்த முதல்வர் ஸ்டாலின், எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி வாய் திறக்கவே இல்லை. மதுரையில் இருக்கும் மத்திய நுாலகம் பாழ்பட்டு கிடப்பதை சீர்படுத்தி, செம்மைப்படுத்த முதல்வருக்கு நேரம் இல்லை. ஆனால், கருணாநிதி பெயரிலான பிரமாண்ட நுாலகம் மட்டும், உடனே அமைய வேண்டும் என்பதில் தீவிர அக்கறை காட்டுகிறார்.

எய்ம்ஸ் மருத்துவமனை துவங்கும் முன்னரே, மருத்துவம் படிக்க மாணவர்களை தேர்ந்தெடுத்து, ராமநாதபுரம் மருத்துவக் கல்லுாரியில் அந்த மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்துள்ளது 'திராவிட மாடல்' அரசு. ஆனால், மருத்துவமனை கட்டும் பணி, வெறும் ஒற்றை செங்கல்லோடு, 'அம்போ' என்று இருப்பதை, மதுரை மார்க்சிஸ்ட் கம்யூ., - எம்.பி., வெங்கடேசன் படம் பிடித்துக் காட்டியும், ஸ்டாலின் அதை கவனத்தில் கொள்ளவில்லை. இந்த விஷயத்தில், முதல்வரின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய வெங்கடேசனை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். ஒருவேளை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில், முதல்வர் அக்கறை காட்டாமல், கருணாநிதி பெயரில் உருவாகும் நுாலகத்திற்கு போதிய அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை சுட்டிக்காட்டி மேடையில் பேசினால், அதன் பிறகாவது அக்கறை காட்டுவாரா என்று தெரியவில்லை.

அதேநேரத்தில், சென்னைக்கு அடுத்தபடியாக, பெரிய நகரமாக மதுரை இருந்தாலும், சென்னையில் இருப்பது போல, பெரிய பாலங்கள், மெட்ரோ ரயில் சேவை, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப பூங்காக்கள் எதுவும், இங்கு உருவாகவில்லை என்பது வேதனை தருகிறது.

'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' என, முன்னர் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தார், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. ஆனால், மதுரையின் தற்போதைய நிலைமையை பார்க்கும் போது, தமிழகத்தின் தென் மாவட்டங்களை மனதில் வைத்தும், அப்படி சொல்லியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மொத்தத்தில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருமா என்று யாராவது கேட்டால், 'வரும்... ஆனா வராது' என, தொட்டால் பூ மலரும் படத்தில், நடிகர் 'என்னத்த' கன்னையா பேசும் வசனத்தை தான் சொல்ல நேரிடுகிறது. பாவம்... மதுரை மக்கள்.கவர்னரின் பிடிவாதம் நல்லதல்ல!

எம்.எல்.ராகவன், திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்: தமிழக அரசுக்கும், கவர்னர் ரவிக்கும் இடையே நிகழ்ந்து வரும் பனிப்போர், எப்போது முடியும் என்று தெரிய வில்லை. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட, 19 மசோதாக்கள் கவர்னர் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.அவர் கையொப்பமிட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்.

ஏதேனும் ஒரு மசோதாவில் அவருக்கு சந்தேகம், தெளிவின்மை இருப்பின், அதை அரசின் மறு பரிசீலனைக்கு அனுப்பலாம். ஆனால், அதே மசோதா திருத்தப்பட்டோ அல்லது திருத்தம் செய்யப்படாமலோ, மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டால், இம்முறை அதற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்து, ஜனாதிபதிக்கு அனுப்பியே ஆக வேண்டும்

அரசியல் சட்டத்தின்படி, கவர்னருக்கு உள்ள கடமை இது! 'மசோதாக்களின் மீது எந்த முடிவும் எடுக்காமல், கவர்னர் கிடப்பில் போடுவது தவறு' என, வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. இதை, அனைத்து மாநில கவர்னர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மக்கள் நலன் கருதி, நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தரும்படி, சமீபத்தில் தன் அமைச்சரவை சகாக்களுடன் கவர்னரை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்; ஆனாலும், கவர்னர் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. இது, அவர் தன் கடமையை மீறுவது மட்டுமின்றி, உச்ச நீதிமன்ற அவமதிப்புமாகும். கவர்னர் தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்; தற்போதைய பிடிவாத போக்கு நல்லதல்ல.

Comments