பள்ளி வாகனங்கள் விபத்தில் சிக்கினால் யார் பொறுப்பு?


பள்ளி குழந்தைகள் பயணிக்கும் பள்ளி வாகனங்கள்சோதனைக்குட்படுத்தப்பட்டு, ஒன்பது மாதங்கள் கடந்த நிலையில், மறு சோதனைக்கு உட்படுத்தாமலே, இன்று குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றி செல்கின்றன. வாகனங்கள் விபத்தில் சிக்கினால், குழந்தைகளின் உயிர்களுக்கு பதில் சொல்வது யார்? கோவையிலுள்ள தெற்கு, வடக்கு, மேற்கு மத்தியம் உள்ளிட்ட நான்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் சேர்த்து மொத்தம், 1,162 பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த இரு கல்வி ஆண்டுகளிலும், சரிவர பள்ளி வாகனங்கள் இயக்கப்படவில்லை. 2021 செப்டம்பர் மாதம், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின், பள்ளிகளை திறக்க அரசு உத்தரவு பிறப்பித்தது.


அதன் பின் செப்., மாதம் அனைத்து பள்ளி வாகனங்கள் இயக்குவதற்கு தகுதியானவையா என்றுசோதனைக்குட்படுத்தப்பட்டு, சான்று வழங்கப்பட்டு இயக்கப்பட்டது.சான்று வழங்கி ஒன்பது மாதங்கள் கடந்துவிட்டன. கோடை விடுமுறைக்குப் பின் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளி விடுமுறை நாட்களில், சுமார் ஒன்றரை மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட பள்ளி வாகனங்கள் அதிகாரிகள் ஆய்வோ, பரிசோதனையோ இன்றி இன்று குழந்தைகளை வழக்கம் போல் ஏற்றி செல்கின்றன.


ஏதாவது விபத்தோ, அசம்பாவிதங்களோ ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது என்று பள்ளிக்குழந்தைகளின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். விடுமுறைக்குப்பின்பு பள்ளி திறக்கப்படும் போது, பள்ளி வாகனங்களை கட்டாயம் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.


இது குறித்து, கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் கூறியதாவது: பள்ளி வாகனங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், வழக்கமாக மேற்கொள்ளும் ஆய்வை மேற்கொள்வர்.கல்வியாண்டு துவங்குவதற்கு முன், பிரத்யேகமாக மேற்கொள்ளப்படும் கல்வி, போக்குவரத்து, போலீஸ் துறை இணைந்து மேற்கொள்ளும் கூட்டு ஆய்வுக்கு, அரசு இனியும் உத்தரவு பிறப்பிக்கவில்லை. அதனால்தான் கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. உத்தரவு வந்தால் உடனடியாக மேற்கொள்வோம். இவ்வாறு, அவர் கூறினார்.வழக்கமாக கல்வி ஆண்டு துவக்கத்தில் மேற்கொள்ளப்படும், பள்ளி வாகன சோதனையை மேற்கொள்வதில்என்ன சிரமம் இருக்கப்போகிறது? உத்தரவு வந்தால்தான் வேலை செய்வார்களா, குழந்தைகளின் உயிர் அவ்வளவு மலிவாகிப்போனதா என்று, அதிகாரிகளுக்கு பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Comments