சேலம் : தமிழகம், போதைப்பொருள் மாநிலமாக மாறி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில், அ.தி.மு.க., புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சி இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் பழனிசாமி கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற பின் ஆதீனங்களின் ஐதீகத்தை மீறி செயல்படுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. போதைப்பொருள் மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. ஆன்லைன் ரம்மி கந்துவட்டி கொடுமை ஆகியவற்றால் பலர் தற்கொலை செய்துள்ளனர். தமிழக அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும்.ஆளுங்கட்சியை தவிர்த்து மற்ற அனைத்து கட்சி எதிர்க்கட்சி தான். அதில் அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. முன்கூட்டியே மேட்டூர் அணையை திறந்து உள்ளதால் கடைமடை பகுதியில் தூர்வார முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.
எல்கேஜி யுகேஜி வகுப்புகள் மூடப்பட்டதால் தமிழகத்தில் ஏழை குழந்தைகள் கல்வி பாதிக்கும். இதை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு பழனிசாமி கூறினார்.
Comments
Post a Comment