கோவை, பெங்களூரு போன்ற பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள ஐடி நிறுவனங்களில் திருமணம் ஆகாத இளம்பெண்கள் மற்றும் ஆண்கள் எனப் பலரும் பணிபுரிகின்றனர். இவர்கள் ஹாஸ்டல் மற்றும் ஷேரிங் அடிப்படையில் வீடுகளில் வாடகைக்கு தங்கியுள்ளனர். வாடகை வீடுகளில் தங்கியுள்ள பலரும் ஹோட்டல் செலவை மிச்சப்படுத்த வீட்டிலேயே உணவு சமைப்பது வாடிக்கையாக உள்ளது. தோசை, சப்பாத்தி, பிரெட் ஆம்லெட், பருப்பு என எளிய வகை அயிட்டங்களே இவர்களின் முக்கிய உணவு.
ஹாஸ்ட்டலில் தங்கியுள்ளவர்கள் தினமும் அங்குள்ள உணவகத்திலோ அல்லது ஹோட்டலிலோ சாப்பிடும் நிலையில், எப்போதாவது போரடித்தால், நூடுல்ஸ், ஆம்லெட் போன்ற எளிய வகை உணவுகளையும் தாங்களாகவே சமைத்து சாப்பிடுவர்.
அப்போது சமையல் வீடியோக்களை பார்த்துவிட்டு, பேஷன் எனும் பெயரில் சமைக்கும் வேடிக்கைகளும் அரங்கேறுகின்றன; வழக்கமான ரெசிபியை கொஞ்சம் கிரியேட்டிவிட்டி கலந்து செய்வர். ஒருசில நேரங்களில் சொதப்பினாலும், பெரும்பாலும் சுவை அள்ளும். இந்நிலையில் தற்போது பிளாக் பாரஸ்ட் கேக் கலந்து நூடுல்ஸ் செய்யும் ரெசிபி குறித்த வீடியோ சமுகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அதில், கடாயில் எண்ணெய் காய்ந்தவுடன் வெங்காயம், மிளகாய் போட்டு தாளித்த பின், பிளாக் பாரஸ்ட் கேக் முக்கால் பங்கு சேர்க்கப்படுகிறது. பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் நூடுல்ஸ் மற்றும் அதன் மசாலாவை சேர்த்து நன்றாக கிளறப்படுகிறது. சில நிமிடங்களில் தண்ணீர் வற்றி, நூடுல்ஸ் ரெடியானதும், அதன்மீது மீண்டும் மீதமுள்ள கேக்கின் கலர்புல்லான மேல்பகுதி வைக்கப்பட்டு பரிமாறப்படுகிறது.
இந்த நூடுல்ஸை தயாரிக்கும்போது பின்னணியில் 'இந்த பொறப்புதான்... நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடைச்சது' என்ற பாடல் வரிகளும் வீடியோவில் ஒலிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேப்போன்று மாம்பழ நூடுல்ஸ் தயாரிக்கும் ரெசிபி குறித்த வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment