அதிமுக.,வில் தற்போது சர்வாதிகார மற்றும் அராஜக போக்கு நிலவி வருவதாக தெரிவித்துள்ள அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ‛தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக.,வில் ஒற்றை தலைமை குறித்தான மோதல் போக்கு நீடித்து வருகிறது. நாளை (ஜூன் 23) கட்சியின் பொதுக்குழு கூட இருக்கும் நிலையில், பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையேயான சண்டை, உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு தரப்பு ஆதரவாளர்களும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், நேற்றிரவு பெண்கள் உள்ளிட்ட பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலர் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் சென்று பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது ஒருவர் தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக பன்னீர்செல்வம் கூறியுள்ளதாவது.
அதிமுக.,வில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட இணைச் செயலாளருமான கேசவன் என்பவர் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த தருணத்தில், "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Comments
Post a Comment