ஓசி பொருள் வாங்கும் சமூக ஊடகப் பிரபலங்கள் இனி 10% வரி செலுத்த வேண்டும்!

விற்பனையை அதிகரிக்க நிறுவனங்களால் வழங்கப்படும் இலவச பொருட்களுக்கு, புதிய விதிகளின் படி இனி சமூக ஊடகப் பிரபலங்கள் மற்றும் மருத்துவர்களிடம் 10 சதவீத வருமான வரிப் பிடித்தம் செய்யப்படும். இப்புதிய வழிகாட்டுதல்கள் ஜூலை 1 முதல் அமலாகிறது.


வரி தளத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் 2022 நிதி சட்டத்தில் இவ்விதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி வணிக நிறுவனங்களின் விளம்பர செலவினங்களால் பயனடைபவர்கள் அதைத் தங்கள் வரிக் கணக்கில் தெரிவிப்பதை உறுதிசெய்யவும், அதன் மதிப்புக்கு வரி செலுத்தவும் வைப்பதற்காக இதனை கொண்டு வந்துள்ளனர். அதன்படி பணம், அலைபேசி, டிவி, கணினி, தங்க நாணையம், விற்பனையை கூட்ட இலவசமாக வழங்கப்படும் வெளிநாட்டு பயண டிக்கெட்டுகள், நிகழ்வுகளுக்கான டிக்கெட்டுகள், உடைகள், அழகுசாதனப் பொருட்கள், கார் போன்றவற்றுக்கு194ஆர் பிரிவின் கீழ் அதன் மதிப்பில் 10 சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும். பொருட்களை மீண்டும் நிறுவனத்திற்கே அனுப்பிவிட்டால் வரி செலுத்த வேண்டியதில்லை.

அதே போன்று புதிய விதியின் படி மருத்துவர்கள் விளம்பர நோக்கத்திற்காக பெறும் இலவச மருந்து சேம்பிள்களுக்கும் இனி வரி செலுத்த வேண்டியிருக்கும். ஒரு மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றும் மருத்துவர் நிறுவனத்திடம் இருந்து இலவச மருந்து சேம்பிள்களை பெற்றால் மருத்துவமனை அவற்றின் மதிப்புக்கு வரி செலுத்த வேண்டும். பின்னர் அதனை மருத்துவருக்கான சம்பள செலவாக கிளைம் செய்துகொள்ளலாம். இதன் மூலம் இறுதியில் மருத்துவர் அத்தொகைக்கு வரி கட்ட வேண்டி இருக்கும்.

Comments