சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி நிலுவையை செலுத்துவதில், பெருநிறுவனங்கள் மற்றும் வி.ஐ.பி.,க்கள் பலர் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்பு அரசியல்வாதிகளுடனும் இவர்கள் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதால், வரி ஏய்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், அரசியல்வாதிகள் குறுக்கீட்டால், 200 கோடி ரூபாய்க்கு மேல், சொத்து வரி செலுத்தப்படாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில், சொத்து வரி பிரதானமானது. 17 லட்சம் கட்டடங்கள் மாநகராட்சியில் உள்ளன. இந்த கட்டடங்கள் வாயிலாக, ஒவ்வொரு நிதியாண்டும், அரையாண்டு இடைவெளியில் சொத்துவரி வசூலிக்கப்படுகிறது. தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டு சீராய்வு பணி நடந்து வருகிறது. எனவே, வருங்காலங்களில், ஒவ்வொரு நிதியாண்டும், 1,500 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.அதிகாரிகள் புலம்பல்இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள பெரு நிறுவனங்கள், ஹோட்டல்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட வி.ஐ.பி.,க்கள், 200 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துவரி பாக்கி வைத்துள்ளனர். இவர்களில் பலர், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அரசியல்வாதிகளாக இருப்பதுடன், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்போரும் சொத்து வரி செலுத்துவதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். இதுபோல் பல ஆண்டுகளுக்கு மேல் சொத்து வரி பாக்கி வைத்திருப்பவர்களுக்கு, அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ., - எம்.பி., முதல் கவுன்சிலர்கள் வரை ஆதரவு அளிக்கின்றனர்.
பல இடங்களில் சொத்து வரி வசூலிப்பவர்களும், ஆதரவாக செயல்படுவதால், மாநகராட்சிக்கான சொத்துவரியை முழுமையாக வசூலிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள் புலம்பி வருகின்றனர். சொத்து வரி செலுத்தாத, ஒரு சில திரையரங்கங்கள், சினிமா பிரபலத்தின் திருமண மண்டபம், ஹோட்டல்களுக்கு மாநகராட்சி சார்பில் 'சீல்' வைக்கப்பட்டது.
சீல் வைப்பு நடவடிக்கைக்குப் பின், பல ஆண்டுகளாக செலுத்தாத வரி தொகையை, சம்பந்தப்பட்ட நபர்கள் செலுத்தியதால், உடனடியாக நடவடிக்கை திரும்பப்பெறப்பட்டது. அதேநேரம் பெரும்பாலான ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், அரசியல்வாதிகளின் வீடுகள், அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள், பினாமிக்கள் பெயரிலான சொத்துக்கள், கட்சி கட்டடங்கள் உள்ளிட்டவற்றிற்கு, பல ஆண்டுகளாக சொத்துவரி பாக்கி உள்ளது.
'லாக் அப் நோட்டீஸ்'
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எவ்வித பாகுபாடுமின்றி, அனைத்து தரப்பு அரசியல்வாதிகளின் குறுக்கீடும் உள்ளதால், இவ்வகை சொத்து உரிமையாளர்களிடம் வரி வசூல் செய்ய முடிவதில்லை என, மாநகராட்சி அதிகாரிகள் புலம்பி வருகின்றனர். சாதாரண மக்கள் வைத்திருக்கும் சொத்து வரி பாக்கிற்கு உடனடியாக, 'லாக் அப் நோட்டீஸ்' வழங்கும் மாநகராட்சி அதிகாரிகள், பிரபலங்களுக்கு அந்நோட்டீசை வழங்க தயங்குவதாக, பொதுமக்கள் தரப்பிலும் புகார் எழுந்துள்ளது.
பட்டியல் வெளியிட தயக்கம் ஏன்?
மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் கூறியதாவது:சென்னை மாநகராட்சியின் சொத்து உரிமையாளர்களுக்கு ஏற்ப, ஒவ்வொரு நிதியாண்டும் 2,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி வாயிலாக வருவாய் கிடைக்கும். ஆனால், அதைவிட குறைந்த அளவில் தான் சொத்துவரியை இலக்கு நிர்ணயித்து மாநகராட்சி வசூலிக்கிறது. சென்னை மாநகராட்சிக்கு, 2,591.83 கோடி ரூபாய் கடன் உள்ளது. இதை தவிர, ஒப்பந்ததாரர்களுக்கு 300 கோடி ரூபாய் பாக்கி, அரசு துறை சார்ந்த நிறுவனங்களுக்கு 374 கோடி ரூபாய் பாக்கியை மாநகராட்சி வைத்துள்ளது.
மாநகராட்சிக்கு கிடைக்கும் வரி வருவாயில், 1,300 கோடி ரூபாய் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளமாகவே வழங்கப்பட்டு விடுகிறது. இருப்பினும், அவர்கள் முறையாக பணியாற்றுவதில்லை.இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சொத்துவரி செலுத்தாதவர்கள் பட்டியலை, கவுன்சிலர்கள் ஆய்வு கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் வெளியிடலாம். ஆனால், அவர்கள் அதையும் செய்வதில்லை. இதன் வாயிலாக பல தவறுகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகளே உடந்தையாக உள்ளனர்.
அரசியல்வாதிகளை குறை கூறும் அதிகாரிகள், சொத்து வரி பாக்கி வைத்துள்ளோர் பட்டியலை பகிரங்கமாக வெளியிட வேண்டும். அப்போது தான், யார் பக்கம் தவறு உள்ளது என்பது மக்களுக்கு தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர். மண்டலங்களுக்கு உத்தரவுசென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வரி செலுத்தாமல் பலர் பாக்கி வைத்துள்ளனர். அந்த வகையில், 110 கோடி ரூபாய் சொத்து வரி பாக்கி உள்ளது.
அதேபோல், 1 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் ரூபாய்க்குள் சொத்து வரி செலுத்தாதவர்களால் 90 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. மொத்தம் 200 கோடி ரூபாய் வரை சொத்து வரியை வசூலிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த சொத்துவரி பாக்கி குறித்த விபரங்களை அளிக்கும்படி, மண்டலங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். அதன் பின், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சொத்துவரி செலுத்தாத ஹோட்டல்கள், திருமண மண்டபம், திரையரங்கம் உள்ளிட்டவைகளுக்கு, 'லாக் அப் நோட்டீஸ்' வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Comments
Post a Comment