வரி நிலுவை தொகை ரூ.35 கோடி எந்த மாவட்டம் ?



வரி நிலுவை தொகை ரூ.35 கோடி எந்த மாவட்டம் ? 


காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மாநகராட்சியில் அனைத்து வரிகள் மற்றும் கடைகள் வாடகை உட்பட 35 கோடி ரூபாய் வரி நிலுவை உள்ளது.


வரி வசூல் செய்ய ஆட்கள் பற்றாக்குறை மற்றும் கடைக்காரர்கள் தொடுத்த நீதிமன்ற வழக்குகளால் வசூல் செய்ய முடியாமல், அலுவலர்கள் திணறுகின்றனர்.காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இங்கு வசிப்போரிடம் இருந்து வசூலிக்கப்படும் சொத்து, குடிநீர், பாதாள சாக்கடை, கடை வாடகை, காலிமனை வரி, தொழில், துாய்மை கட்டணம் போன்ற வரிகளில் இருந்து மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.இந்த தொகையில் இருந்து, மாநகராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.நடப்பாண்டு வரி வசூல் சமயத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்ததால், அனைத்து பணியாளர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டதால், வரி வசூல் செய்ய முடியவில்லை.இதனால் நடப்பு நிதியாண்டில் அனைத்து வரிகள், கடை வாடகை உட்பட 35.34 கோடி ரூபாய் வரி நிலுவையில் உள்ளது.மேலும், மாநகராட்சி வருவாய் பிரிவில் வரி வசூல் செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இருக்கும் சொற்ப ஆட்களை வைத்து, வரி வசூல் செய்யப்படுகிறது.அதேபோல், மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் மொத்தம் 310 உள்ளன. இந்த கடைகளுக்கு வாடகை உயர்த்தப்பட்டதால், வாடகைதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


சென்னை உயர் நீதிமன்றத்தில் 20 வழக்குகளும், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் 93 வழக்குகளும் உள்ளன.இந்த வழக்குகள் முடிவுக்கு வந்தால் தான், அவர்களிடம் இருந்து வாடகை வசூல் செய்ய முடியும். கடை வாடகை மட்டும் 12.12 கோடி ரூபாய் பாக்கி உள்ளது.


பெயர் வெளியிடாத மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாநகராட்சியில் உள்ள கடை வாடகைதாரர்கள், வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் வாடகை வசூல் செய்ய முடியவில்லை.கடந்த 2017ம் ஆண்டு முதல் வாடகை பாக்கி நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.பழைய வரி பாக்கியை மட்டுமே மாநகராட்சி அலுவலர்கள் வசூல் செய்கின்றனர். அரசு உயர்த்திய புதிய வரி நடைமுறைக்கு வந்தால் 10 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு வருவாயாக கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments