சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 14 நாட்களில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் ரூ. 6.99 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடன் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.
அரசு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிமீறி சுவரொட்டி ஒட்டும் நபர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், 20.03.2022 முதல் 03.04.2022 வரை 14 நாட்களில் ரூ.50,200/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. தூய்மை பணியாளர்களால் வீடுகள் தோறும் சென்று குப்பைகள் பெறப்படுகின்றன. மேலும், பொது இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 20.03.2022 முதல் 03.04.2022 வரை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.2,65,400/- அபராதமும், கட்டுமான கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.3,83,750/- அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 14 நாட்களில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் ரூ. 6,99,350 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றை தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
Comments
Post a Comment