போலி மேட்ரிமோனி தொடங்கி இளம்பெண்களிடம் மோசடி

திருவள்ளூர்

அமெரிக்க இன்ஜினியர் எனக்கூறி நாடகமாடிய ஆசாமி போலியாக தெலுங்கு மேட்ரிமோனி தொடங்கி நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் கைலாசபுரம் பகுதியை சேர்ந்த சித்ரா என்கிற இளம்பெண் சித்தூர் 2வது காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், தெங்லுகு மேட்ரிமோனியில் வரன் இருப்பதாக கூறி ₹2.40 லட்சத்தை ஒரு நபர் மோசடி செய்ததாக தெரிவித்திருந்தார். இப்புகாரின்மீது போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த மோசடியில் ஈடுபட்டதாக கர்ணம் பிரசாத் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சித்தூர் அடுத்த காசிரால பகுதியைச் சேர்ந்தவர் கர்ணம்பிரசாத் (42). சித்தூர் மாவட்டத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த இவருடைய தந்தை இறந்ததால், வாரிசு அடிப்படையில் கர்ணம் பிரசாத்துக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. இவர் கால்நடை மருத்துவத்துறையில் 2012ம் ஆண்டு வரை பணிபுரிந்து வந்தார். பின்னர் அந்த வேலையில் விருப்பம் இல்லாததால், அதை ராஜினாமா செய்தார். 


அதன்பிறகு வேறு வேலையின்றி, வருமானமின்றி தவித்த அவர் மதுபோதைக்கு அடிமையாகியுள்ளார். மது குடிக்க பணம் தேவை என்பதால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டார். 2019ம் ஆண்டு சித்தூர் கைலாசபுரம் பகுதியை சேர்ந்த சித்ரா என்பவருடன் இணையதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான்,  அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளதாக இணையதளம் மூலம் நம்ப வைத்தார். தனக்கு திருமணமாகவில்லை. எனவே இணையதளத்தில் உனது புகைப்படத்தை பார்த்தேன். உன்னை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன் எனக்கூறியுள்ளார். பின்னர் அதே ஆண்டு, தான் அமெரிக்காவில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்துள்ளேன். வெளிநாட்டு கரன்சி எடுத்து வந்ததால் விமான நிலையத்தில் என்னை போலீசார் கைது செய்துள்ளனர். ₹2.50 லட்சம் கொடுத்தால் விட்டு விடுவதாக கூறுகின்றனர். எனவே நீ ₹2.50 லட்சம் கொடுத்தால், நான் நேரில் வந்து என்னிடம் உள்ள வெளிநாட்டு கரன்சியை மாற்றி தருகிறேன் என தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சித்ரா தன்னிடம் இருந்த ₹2.40 லட்சத்தை அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சித்ரா 2வது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் என விசாரணையில் தெரிய வந்தது.


Comments