உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மகன்; மீட்டுத்தரக்கோரி கண்ணீர் மல்கும் தேனி பெற்றோர்! Evidenceparvai BREAKING TAMIL NEWS on February 24, 2022 Get link Facebook X Pinterest Email Other Apps தேனி சடையால் கோயில் தெருவில் வசிப்பவர் சரவணன் இவரது மனைவி வசந்தி. இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்களது மகன் ரோஹித்குமார் (21) உக்ரைன் நாட்டில் உள்ள கார்க்கியூ என்னும் நகரில் உள்ள கார்க்கியூ யுனிவர்சிட்டியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்று போர் அபாயம் இருந்த நிலையில் உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்று இந்திய அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ரோஹித்குமாரின் தந்தை சரவணன் ரோஹித்குமார் இந்தியா திரும்புவதற்காக வரும் மார்ச் 8ஆம் தேதி விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். இதனால் மார்ச் 8ம் தேதி ரோஹித்குமார் இந்தியா திரும்பி விடுவார் என்று அவரது பெற்றோர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இன்று ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. மேலும் ரோஹித்குமார் தங்கியுள்ள கார்க்கியூ நகரை ரஷ்யா கைப்பற்றி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனைத்தொடர்ந்து ரோஹித்குமாரின் பெற்றோர்கள் கலக்கம் அடைந்தனர். இன்று காலை 8 மணி முதல் சுமார் இருபது முறை ரோஹித்குமார் அவரது பெற்றோரைத் தொடர்பு கொண்டு பதற்றத்துடன் பேசியுள்ளார். இறுதியாக இன்று மாலை 4 மணிக்கு அவரது பெற்றோர்களுடன் பேசிய ரோஹித்குமார் தான் தங்கியுள்ள கார்க்கியூ நகரை ரஷ்யா கைப்பற்றி விட்டதாகவும், தான் தங்கியுள்ள இடத்திற்கு அருகிலேயே குண்டுகள் வெடித்து வருவதால் மிகுந்த பயத்துடன் இருப்பதாகவும், தன்னுடன் 500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தங்கியிருப்பதாகவும், தங்களை உக்ரைன் அரசு ஒரு பதுங்கு குழியில் தங்க வைத்திருப்பதாகவும்,பதுங்கு குழியில் மொபைல் சிக்னல் கிடைக்காது என்பதால் இதற்குமேல் எங்களை எந்தவிதத்திலும் தொடர்பும் கொள்ள முடியாது என்றும் அழுது கொண்டே கூறியுள்ளார்.இதனால் பதறிப்போன ரோஹித்குமாரின் பெற்றோர்கள் இன்று மாலை தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரனை நேரில் சந்தித்து உக்ரைன் நாட்டில் பதுங்கு குழியில் சிக்கித் தவிக்கும் தங்களது மகனை மத்திய மாநில அரசுகள் உதவியுடன் மீட்டு இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க மனு அளித்தனர். அவர்களிடம் மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் துறை சார்ந்த அதிகாரிகளுடன் உடனடியாக இதுபற்றி பேசி, மாணவரை இந்தியா கொண்டு வர உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்றும் என்று உறுதி அளித்ததுடன் ரோஹித்குமாரின் பெற்றோர்களுக்கு ஆறுதலும் கூறி அனுப்பி வைத்தார். Comments
Comments
Post a Comment