பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் பில்டப் வேட்பாளர்களுக்கு வாய்ப்பில்லை செயல்திறன் கொண்ட தலைவருக்காக காத்திருக்கும் ஓட்டு
தர்மபுரி மாவட்டத்தின் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் வெற்றிக் கனியைப் பறிக்கும் வேட்பாளர்கள் யார்? அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர் யார்? என்ற எதிர்பார்ப்புகளோடு மக்கள் காத்திருக்கின்றனர். இந்த ஊரின் அசல்பெயர் பல்லூர்பேட்டை. பின்னர் இது உள்ளூர் அரசாங்கத்தால் பாப்பாரப்பட்டி என்று அழைக்கப்பட்டது. பார்ப்பனார்பேட்டை என்ற சொல்லே, காலப்போக்கில் மருவி பாப்பாரப்பட்டி என்று அழைக்கப்பட்டதாகவும் பெயர்காரணங்கள் கூறுகிறது. இயற்கை எழில் சூழ்ந்த பிக்கிலி மலையும், காவிரி ஆர்ப்பரித்து கொட்டும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியும் இதற்கு அருகாமையிலுள்ள கவனம் ஈர்க்கும் இடங்கள்.
8சதுரகிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பாப்பாரப்பட்டியின் கிழக்கே தர்மபுரியும், வடக்கே கிருஷ்ணகிரியும், தெற்கே சேலமும் அமைந்திருப்பது சிறப்பு. பாப்பாரப்பட்டிக்கு என வரலாற்றில் ஒரு தனி சிறப்பு உண்டு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி சுப்ரமணிய சிவா அவர்கள் தமது இறுதிக் காலத்தை பாப்பாரப்பட்டியில் கழித்து இங்கேயே அமரத்துவம் அடைந்தார். அந்த இடத்திலேயே அவரது நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது கனவான பாரத மாதா கோவிலும் நனைவாகி வருகிறது. இங்கே அமைந்துள்ள நூலகமும் கவனம் ஈர்க்கிறது.
இப்படிப்பட்ட சிறப்புகள் வாய்ந்த பாப்பாரப்பட்டி 1949ம் ஆண்டிலேயே பேரூராட்சியாக உருவெடுத்த பெருமைக்குரியது. 1969 முதல் நிலை பேரூராட்சியாகவும், 1989ம் ஆண்டு முதல், தேர்வுநிலைப் பேரூராட்சியாகவும் செயல்பட்டு வருகிறது. அப்பாதுரை, திருவேங்கடம், ராஜிபாபு என்று பலர் தலைவர்களாக அமர்ந்து மக்கள் பணியாற்றி உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் 2011ம் ஆண்டுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. இதனால் பெரும்பாலான பணிகளும் முடங்கியது. இந்தநிலையில் நாளை (19ம்தேதி) உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி நிற்கிறது பாப்பாரப்பட்டி பேரூராட்சி.
தற்போதைய நிலவரப்படி 15வார்டுகளை கொண்ட பாப்பாரப்பட்டியில் ஆண்கள் 5,253பேர், பெண்கள் 5,446 பேர், இதரர் 1 என்று மொத்தம் 10,700 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் வாக்குகளை கருத்தில் கொண்டு திமுக13, அதிமுக14, பாமக13, அமமுக4, நாம் தமிழர் 4, பாஜக 2, கம்யூனிஸ்ட்2, தேமுதிக1, சுயேட்சைகள் 11 என்று மொத்தம் 64 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் மக்கள் தேர்ந்தெடுக்கப்போகும் வார்டு உறுப்பினர்கள் யார்? அந்த வார்டு உறுப்பினர்களால் தேர்வு பெறப்போகும் தலைவர், துணைத் தலைவர் யார்? என்பது பாப்பாரப்பட்டி மக்களின் பரவலான எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
பாப்பாரப்பட்டி
பேரூராட்சி பொதுமக்கள் கூறியதாவது:தர்மபுரிஓகேனக்கல் சாலையில்
அமைந்திருக்கும் பாப்பாரப்பட்டி தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து
செல்லும் பகுதியாக உள்ளது. இதனால் இங்கு போக்குவரத்து நெரிசலும் பிரதானமாக
உள்ளது. இந்த பிரச்னைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. இந்த பகுதி
மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக்குடி நீர் திட்டத்தில் இந்த பகுதிக்கு
குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த
திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாமல் விட்டுவிட்டனர். இதனால் குடிநீர்
பற்றாக்குறை என்பது தொடர்கிறது. அதே நேரத்தில் பல இடங்களில் குடிநீர்
இணைப்புக்கான பைப்புகள் உடைந்து கிடக்கிறது. அவற்றை சரியாக பராமரிக்காமல்
இருப்பதால் தண்ணீர் வீணாகி, சாக்கடையில் கலக்கும் அவலமும் தொடர்கிறது.
அனைத்து
வார்டுகளிலும் சாலைகள் உடைந்து பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கிறது.
இதேபோல் வார்டுகளில் வைக்கப்பட்டுள்ள மினி டேங்குகளும் உடைந்து கிடக்கிறது.
இதனால் பெருமளவில் தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சிவா
காலனி பகுதியில் எந்த நேரத்திலும் இந்த அவலத்தை காணலாம். இதேபோல் திமுக
ஆட்சி காலத்தில் அரசு கட்டிக்கொடுத்த குடியிருப்புகளை பராமரிப்பதிலும்
கடந்த 10 ஆண்டுகளில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை.
இதனால் பல
குடியிருப்புகள் சிதிலமைடைந்து கிடக்கிறது. பாப்பாரப்பட்டி பேரூராட்சியில்
2011முதல் 2016வரை எந்த மேம்பாட்டு பணிகளும் நடக்கவில்லைஅடுத்த 5ஆண்டுகள்
உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் போனது.இந்த வகையில் 10 ஆண்டுகள்
வீணாகிவிட்டது. இந்தநிலையில் வரப்போகும் தேர்தலில், எங்களுக்கான
பிரதிநிதிகளை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்ய காத்திருக்கிறோம். அவர்கள்
வாக்குறுதியில் வாய்ஜாலம் காட்டுபவர்களாக மட்டும் இருக்ககூடாது.
அதை
சாத்தியப்படுத்தும் செயல்திறன் கொண்டவராகவும் இருக்க வேண்டும். இதை
கருத்தில் கொண்டு வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வோம். அவர்களில் ஒருவர்
தலைவராகவும், துணைத்தலைவராகவும் இருந்து பேரூராட்சியை திறம்பட
நடத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
Comments
Post a Comment