கோவையின் முதல் பெண் மேயர் யார்? அசுரபலத்துடன் தி.மு.க.

 

  கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக, தி.மு.க.,வை சேர்ந்த வேட்பாளர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். அவர் யார் என்கிற விவாதம் கட்சி வேட்பாளர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. சென்னைக்கு அடுத்த பெரிய மாநகராட்சியான கோவையில், மாமன்றத்தை திறம்பட நடத்தக்கூடியவராக அவர் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கோவை மாநகராட்சியில், 100 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 75 வார்டுகளில் தி.மு.க., காங்கிரஸ் - 9, மா.கம்யூ., - 5, இ.கம்யூ., - 4, ம.தி.மு.க., - 3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 1, த.ம.மு.க., - 1 வார்டில் போட்டியிட்டன.



இதில், தி.மு.க., - 73, காங்., - 9, மா.கம்யூ., - 4, இ.கம்யூ., - 4, ம.தி.மு.க., - 3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 2, த.மு.மு.க., - 1 என, 96 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.அ.தி.மு.க., - 3 மற்றும் ஒரு எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி, ஆர்.எஸ்.புரம் கலையரங்கில், மார்ச் 2ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. மறைமுகத் தேர்தல் மூலமாக, மார்ச் 4ல் மேயர் மற்றும் துணை மேயர் தேர்வு செய்யப்படுவர்.

ஆனால், அதிபெரும்பான்மையான வார்டுகளில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றிருப்பதால், மேயர், துணை மேயர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இதன்பின், கவுன்சிலர்களை மண்டலம் வாரியாக பிரித்து, அவர்களில் ஒருவரை மண்டல தலைவராக தேர்வு செய்ய வேண்டும்.

இதேபோல், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு, பணிகள் குழு, சுகாதாரக்குழு, நகரமைப்பு குழு, கணக்குக்குழு, கல்விக்குழுக்கள் மற்றும் நியமனக்குழுக்கள் ஏற்படுத்தப்படும்.நியமனக்குழுவில், மேயர், கமிஷனர், ஒரு உறுப்பினர் மட்டும் இடம் பெற்றிருப்பர். இவர்கள், மாநகராட்சிக்கு தேவையான ஊழியர்கள் நியமிப்பது தொடர்பாக, குழுவில் முடிவெடுத்து, உத்தரவு வழங்குவர்.


Comments