ஆளும் திரிணாமுல் மோதலுக்கு மத்தியில் மேற்குவங்க சட்டசபை முடக்கப்பட்டது. ஆளுநரின் திடீர் நடவடிக்கையால் குழப்பம்
கொல்கத்தா:
மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல், ஆளும் திரிணாமுல் கட்சிக்குள்
மோதலுக்கு மத்தியில் சட்டப்பேரவையை முடக்கி வைத்து, ஆளுநர் ஜக்தீப் தன்கர்
உத்தரவிட்டுள்ளதால், அம்மாநில அரசியலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல்
காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அம்மாநில ஆளுநராக ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றது
முதல், அவருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே நிர்வாகம் மற்றும்
அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. இந்த மோதலின்
உச்சக்கட்டமாக கடந்த சில வாரங்களுக்கு முன் ஆளுநர் ஜக்தீப் தன்கரை மம்தா
பானர்ஜி டுவிட்டரில் பிளாக் செய்தார்.
இந்நிலையில்,
மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுகேந்து சேகர் ராய்,
மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கரை திரும்ப பெற வலியுறுத்தி, தீர்மானம்
ஒன்றை தாக்கல் செய்தார். இவ்வாறாக, ஆளுநருக்கும் மேற்கு வங்க அரசுக்கும்
இடையேயான மோதல் போக்கு அதிகரித்துவரும் சூழலில் திடீர் திருப்பமாக
மேற்குவங்க சட்டப்பேரவையை முடக்கி, ஆளுநர் ஜக்தீப் தன்கர்
உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
‘அரசியலமைப்பு சட்டத்தின், 174வது பிரிவு வாயிலாக எனக்கு வழங்கப்பட்டுள்ள
அதிகாரத்தை பயன்படுத்தி, மேற்குவங்க சட்டப்பேரவையை பிப். 12 (நேற்று) முதல்
முடக்கி வைக்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment