பிக்பாஸ் 5: "ஆரியை சீசனின் கடைசி நிகழ்வில் தவிர்க்க இதுதான் காரணம்" - சுரேஷ் சக்கரவர்த்தி

 


பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வுக்கு தன்னை அழைக்கவில்லை என முந்தைய சீசனின் வெற்றியாளரான நடிகர் ஆரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் ஐந்தாவது சீசனின் இறுதி நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பாக இருக்கிறது. நிகழ்ச்சிக்கான இறுதி படப்பிடிப்பு இன்று தொடங்கி இருக்கும் நிலையில் ராஜூ, பிரியங்கா, பாவனி, நிரூப், அமீர் ஆகிய ஐந்து பேர் இறுதி போட்டியாளர்களாக உள்ளனர். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கும் போது அந்த கடைசி வாரத்தில் அந்த சீசனில் இருந்து குறைந்த மக்கள் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் கடைசி வாரத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவார்கள்.

அதுபோல, இந்த வாரம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டமாக பிக்பாஸ் வீட்டிற்குள் தாமரை, சுருதி, சிபி, அபிநய், வருண், அக்‌ஷரா, நாடியா ஆகிய வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். இதில் பிரியங்காவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவு காரணமாக அவரை ஓய்விற்காக நிகழ்ச்சியில் இருந்து பிக்பாஸ் வெளியேற்றினார். இறுதி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என்பது இன்று வெளியான முன்னோட்ட காட்சி மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், இறுதி ஐந்து போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கும் போது கடைசி இடத்தில் இருந்து ஒவ்வொருவராக வெளியே கூட்டி வருவார்கள். அப்படி போட்டியாளர்களை கூட்டி வருவதற்கு முந்தைய சீசன்களில் பங்கு பெற்ற போட்டியாளர்கள் வருவார்கள்.

மேலும், இந்த சீசனின் டைட்டில் வெற்றியாளருக்கு முந்தைய சீசனின் டைட்டில் வெற்றியாளர், அந்த சீசனின் கோப்பையை கொடுப்பதும் வழக்கம். அதன்படி, கடந்த சீசனின் டைட்டில் வின்னரான ஆரி, பிக்பாஸ் சீசன் 5 இறுதி நிகழ்ச்சிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் பார்வையாளர்களிடையே இருந்தது.

ஆனால் இந்த சீசனின் இறுதி நிகழ்வுக்கு தான் அழைக்கப்படவில்லை என தனது சமூக வலைதள பக்கங்களில் நடிகர் ஆரி தெரிவித்துள்ளார்.

'பிக்பாஸ் 5 சீசனின் இறுதி நிகழ்வில் வெற்றி கோப்பையை வெற்றியாளருக்கு கொடுப்பதற்காக என்னை எதிர்ப்பார்ப்பீர்கள் என தெரியும். நானும் உங்களையும், கமல் அவர்களையும் மீண்டும் நேரில் சந்திப்பதற்கு ஆவலாகவே இருந்தேன். ஆனால், துரதிருஷ்டவசமாக என்னை அவர்கள் நிகழ்விற்கு அழைக்கவில்லை' என அந்த பதிவில் விஜய் தொலைக்காட்சியையும், நடிகர் கமல்ஹாசனையும் டேக் செய்துள்ளார் ஆரி.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசன்களில் முந்தைய சீசனின் வெற்றியாளர்கள் வரும் போது இந்த சீசனில் ஆரியை அழைக்காமல் இருப்பது சரியல்ல, ஆரி நிச்சயம் வர வேண்டும் என ஆரியின் இந்த பதிவிற்கு கீழ் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த நான்காவது சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி ஆரியின் இந்த பதிவிற்கு, 'உங்களை அழைக்காதது நிகழ்ச்சிக்குதான் இழப்பு தம்பி, உங்களுக்கு அல்ல' என கமென்ட்டில் பதிவிட்டிருந்தார்.

கடந்த சீசனில் இவரது பெயரும் இறுதி நிகழ்வின் போது அழைப்பில் விடுபட்டு அவரும் இதுபோன்று வருத்தம் தெரிவித்து பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதி நிகழ்வில் இப்படி போட்டியாளர்களது பெயர்கள் எதனால் விடுபடுகிறது என்பதை தெரிந்து கொள்ளவும் ஆரியை அழைக்காமல் போனதற்கு என்ன காரணம் எனவும் தெரிந்து கொள்ள சுரேஷ் சக்கரவர்த்தியிடம் பேசினேன்.

"ஆரியை அழைக்க கூடாது என்ற நோக்கத்தோடு இது நடக்கவில்லை. நிகழ்ச்சி தயாரிப்பு குழுவில், நிகழ்ச்சிக்கான திட்டமிடல் தயாரித்தவர்களால் இது தெரியாமல் நடந்த தவறு. இதேதான் எனக்கும் கடைசி சீசனில் நடந்தது. ஐந்து நாட்கள் எல்லோரும் உள்ளே போனபோது எனக்கு மட்டும் அழைப்பு வரவில்லை. இது அந்த சேனலின் தலைமைக்கோ நிகழ்ச்சி இயக்குநருக்கோ தயாரிப்பு நிறுவனத்திற்கோ தெரிய வாய்ப்பில்லை.

நான் அவர்களுக்கு முன் கூட்டியே எனக்கு அழைப்பு வரவில்லை என கவனத்திற்கு கொண்டு சென்றதால் மட்டுமே கடைசி நாளிளாவது நான் போக முடிந்தது. இந்த நிகழ்ச்சி தயாரிப்பின் கடைசி நிலையில் இருப்பவர்கள் செய்த தவறு இது. அப்படிதான் ஆரிக்கு நேற்று இரவுதான் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என அழைப்பு வந்திருக்கிறது. ஆனால், அவர் அப்போத ஊட்டியில் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார். அவர் அடுத்த நாள் 11 மணிக்கு இருக்க வேண்டும் என திடீரென சொன்னால் எப்படி வர முடியும்?

ஆரி குறித்து தொலைக்காட்சியின் உயர் பதவியில் இருந்தவர்கள் கேட்டிருக்கும் போதுதான் அவர் பெயர் விடுபட்டிருந்தது தெரிய வந்துள்ளது. நடந்தது இதுதான் என எனக்கு தொலைக்காட்சி தரப்பில் இருந்து இப்போதுதான் தெரிவித்தார்கள். நானும் இந்த தகவலை ஆரிக்கு பகிர்ந்துள்ளேன்.

ஓமிக்ரான் பரவல் அதிகமுள்ள இந்த நிலையில் ஆரியால் கடைசி நேரத்தில் அழைத்தால் கூட நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. அந்த வருத்தத்தைதான் அவர் அப்படி பதிவிட்டுள்ளார்.

அப்படியே கடைசி நேரத்தில் ஆரி உள்ளே வந்தாலும் அவர் கண்ணாடி கூண்டுக்குள் இருந்து போட்டியாளர்களுடன் பேச முடியாது. அவரும் அங்கு உள்ளே போட்டியாளர்களுடன் நேரம் செலவிட வேண்டும். நேற்று இரவுதான் ஆரிக்கு அழைப்பு போயிருந்தாலும் அவர் இப்போது சென்னைக்கு வந்துவிட்டார். நிகழ்வுக்கு கடைசி நேரத்தில் ஆரி வர கமல் சம்மதம் தெரிவித்து இருந்தாலும் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சியில் கடைசியில் மாற்றம் செய்வது கடினம்.

இதுதான் நடந்தது. மற்றபடி ஆரி எந்த அளவிற்கு வருத்தப்படுகிறாரோ அதை விட அதிகமாகவே வழக்கமாக நடந்து வரும் இந்த வெற்றியாளர் சம்பிரதாயத்தை தவற விடுவதில் தொலைக்காட்சி தரப்பிற்கும் வருத்தம்தான்," என்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி.

Comments