அரூர் அருகே மலை கிராமங்களுக்கு தார் சாலை வசதி வேண்டி பள்ளி குழந்தைகள் உள்ளிட்டோர் 5 மணி நேரமாக சாலை மறியல்...

அரூர் அருகே மலை கிராமங்களுக்கு தார் சாலை வசதி வேண்டி பள்ளி குழந்தைகள் உள்ளிட்டோர் 5 மணி நேரமாக சாலை மறியல்...

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி மலைப்பகுதிக்கு உட்பட்ட அரசநத்தம், கலசப்பாடி, கருக்கம்பட்டி உள்ளிட்ட 7 மலை கிராமங்களில் சுமார் 4500க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலை, மலை அடிவாரத்தில் இருந்து 7 கி.மீட்டர் தூரம், தார் சாலை இல்லாமல், குண்டும் குழியுமாக மண் சாலையாகவே உள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் விவசாயம், கல்வி, போன்ற தேவைகளுக்கும் கர்ப்பிணி பெண்கள், முதியோர் உள்ளிட்டோர் மருத்துவமனை செல்வதற்கும் மற்றும் அனைத்து பணிகளுக்கும் சுலபமான முறையில் செல்வதற்கு தீர்வு இல்லாமல் ஒரு கேள்விக்குறியாக உள்ளது. 

தங்கள் பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலையை தார் சாலையாக மாற்றி தர வலியுறுத்தி அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 6 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்க மத்திய அரசின் வனம் சுற்றுச்சூழல் காலநிலை மாசுபாடு துறையினர் அனுமதித்த  நிலையில்  தற்போது வரையில் சாலை அமைக்க பணிகள் எதுவும்  நடைபெறவில்லை.  

மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் நேரத்திற்கு செல்ல முடியாததால் கல்வி பாதிக்கப்படுவதாக தெரிவித்து தங்கள் பகுதிக்கு உடனடியாக சாலை வசதியை ஏற்படுத்தி தரக்கோரி ஏழு கிராமங்களைச் சார்ந்த பள்ளிக்குழந்தைகள், மாணவர்கள், என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் திருவண்ணாமலை - சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்  அமர்ந்து சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தகவலை அறிந்த தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் நேரில் சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஆனால் மக்கள் உடன்படாததால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக காவல்துறையினர் முற்பட்டனர். பின்பு பள்ளி குழந்தைகள் மாணவ மாணவிகள் கிராம மக்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் இவர்களை அழைத்துச் சென்ற பேருந்து பாதி வழியில் நிறுத்தப்பட்டு பின்பு மீண்டும் போராட்ட களத்தில் இறங்கிய மக்கள் சாலை மறியலில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வந்த நிலையில் அசம்பாவிதங்கள் தடுக்கும் பொருட்டு கடைகள் சிறிது நேரம் அடைக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து வரும் எட்டாம் தேதி அன்று கிராம மக்களில், 10 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்ததன் பேரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பள்ளி குழந்தைகள் கிராம மக்கள் என அனைவரும் ஈடுபட்டு நடைபெற்ற இந்த சாலை மறியலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டன.

Comments