வெறும் #தேர்தல் வெற்றிக்காகக் கணக்கு போடும் அமைச்சர் #அமித்ஷா, #நாட்டுப் பாதுகாப்பில் கோட்டை விட்டுள்ளார் : அமைச்சர் #மனோ தங்கராஜ் Minister #AmitShah, who is only counting on #election victory, has left the line in #national security: Minister #Mano Thangaraj


சென்னை : வெறும் தேர்தல் வெற்றிக்காகக் கணக்கு போடும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டுப் பாதுகாப்பில் கோட்டை விட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் அத்துமீறி இளைஞர்கள் 2 பேர் நுழைந்து முழக்க மிட்டனர். மேலும், வண்ண குண்டுகளையும் வீசினர். இதேபோல் நாடாளுமன்றத்தின் வெளிப்பகுதியில் பெண் உள்பட 2 பேரும் கோஷமிட்டனர். இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு வழக்கம்போல் பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றத்தின் 2 அவைகளும் கூடியது. அப்போது பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால் நாடாளுமன்றம் முடங்கியது. தொடர் அமளியில் ஈடுபட்ட 15 எம்பிக்கள் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


இந்நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டின் பாதுகாப்பே உயிர்மூச்சு எனக் கூறிக் கொள்ளும் பாஜக, நாட்டின் உட்சபட்ச பாதுக்காப்பு இடமாக இருக்கும் நாடாளுமன்ற மக்கள் அவைக்குள் நடந்த தாக்குலை தடுக்க முடியவில்லை. இதனை மறைக்க, வழக்கம் போல சதிக் குற்றச்சாட்டுகளைக் கூறித் திசைதிருப்ப முயன்றோருக்கு, பாஜகவின் மைசூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்தான் அனுமதி தந்தார் என்ற செய்தி ஏமாற்றத்தை தந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் விவாதங்களை நடக்கவிடாமல், ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கினால், வேண்டாத இடத்திலிருந்து ஆபத்தான வடிவத்தில் குரல்கள் எழும் என்பதற்கு சான்று இன்றைய தாக்குதல். வெறும் தேர்தல் வெற்றிக்காகக் கணக்கு போடும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டுப் பாதுகாப்பில் கோட்டை விட்டுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comments