'ஆபாசப் படங்கள் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடுக்கப்பட வேண்டும்' - பெண் ஆபாசப்பட இயக்குநர்


 'ஆபாசப் படங்கள் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடுக்கப்பட வேண்டும்' - பெண் ஆபாசப்பட இயக்குநர்
"நெறிமுறைகள் என்று எதைச் சொல்கிறீர்கள்? நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் நெறிமுறைகளுடன் தான் இயங்குகின்றனவா? ஒரு தேவாலய அமைப்பு நெறிமுறையுடன் இயங்குகிறதா? ஃபேஷன் துறை, உணவுத் துறை நெறிமுறைகளுடன் தான் இயங்குகிறதா?
ஆபாசப் படங்களையும் நெறிமுறை சார்ந்து உருவாக்க முடியும், ஆனால் அதை யார், எப்படி உருவாக்குகிறார்கள் என்பது முக்கியம்" என்கிறார் ஆபாசப் பட இயக்குநர் எரிகா லஸ்ட்.


போர்னோகிராஃபி என்பதை உண்மையில் நெறிமுறைகளுடன் அணுக முடியுமா என்ற பிபிசி செய்தியாளர் எம்மா பாயிண்டனின் கேள்விக்கு எரிகா அளித்த பதில்தான் இது.
போர்னோகிராஃபி என்றால் புத்தகங்கள், படங்கள், சிலைகள், திரைப்படங்கள் மற்றும் பிற ஊடகங்களில் பாலியல் நடத்தையை பிரதிநிதித்துவப்படுத்துவது என்று அர்த்தம். இதில் முக்கியமாக ஆபாசப் படங்கள் என்பது ஒழுக்க நெறிகளுக்கு எதிரானதாகவும், சட்ட விரோதமாகவும் பார்க்கப்படுகிறது. பல நாடுகளில் ஆபாசப் படங்களை பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம்.
போர்னோகிராஃபி தொழில்துறையில் ஆபாசப் படங்களின் பங்கு அதிகமாக உள்ளது. இந்தத் துறையில் உள்ள சிக்கல்கள், அதில் பெண்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்களின் பங்கு, ஆபாசப் படங்களை எப்படி படமாக்க வேண்டும், அதைப் பார்ப்பதற்கான வயது வரம்பை நிர்ணயித்தல் போன்றவை குறித்து பிபிசி செய்தியாளர் எம்மா பாயிண்டனுடன் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் எரிகா லஸ்ட்.
கிட்டத்தட்ட 88 சதவீத ஆபாசப் படங்களில் உடல்ரீதியிலான துன்புறுத்தல்கள் இருப்பதாகவும், 49 சதவீத ஆபாசப் படங்களில் மோசமான வார்த்தைகள் பிரயோகிக்கப்படுவதாகவும் போர்ன் ஹப் என்னும் இணையதளம் சார்பாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு கூறுகிறது. மேலும் இதைப் பார்ப்பவர்கள் 70 சதவீதம் ஆண்கள் என்றும், 34 வயதுக்குக் கீழே உள்ள இளைஞர்கள் என்றும் அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
இந்த மாதிரியான உடல்ரீதியிலான துன்புறுத்தல்கள் நிறைந்த ஆபாசப் படங்களைப் பார்ப்பதால் மோசமான விளைவுகள் உண்டாகலாம். எனவே ஆபாசப் படங்களை நெறிமுறைகள் சார்ந்து உருவாக்க முடியும் என்றும் அது மிகவும் அவசியமானதும்கூட என்றும் கூறுகிறார் இயக்குநர் எரிகா லஸ்ட்.

Comments