595 பள்ளி கட்டிடங்களின் சீரமைப்பு பணியை மழைக்கு முன்பே விரைந்து முடிக்க வேண்டும்-ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், 595 பள்ளி கட்டிடங்களை பழுதுநீக்கி சீரமைக்கும் பணியை மழைக்காலம் தீவிரம் அடையும் முன்பு விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஊரக வளரச்சித்துறை சார்பில் நடைபெறும் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நடந்தது. அதில், முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்கள் சரண்யா, சுரேஷ்குமார் மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


கூட்டத்தில் அவர் பேசியதாவது:- வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து, துறைவாரியாக கலெக்டர் ஆய்வு செய்தார். கடந்த ஆண்டுகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்து, இந்தமுறை அதுபோன்ற பாதிப்புகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். குறிப்பாக, சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள் குறித்து நேரடி ஆய்வு செய்து, அவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் உள்கட்டமைப்பு மேமபாட்டு திட்டத்தின் கீழ், ₹5.72 கோடி மதிப்பில் 402 பள்ளி கட்டிடங்கள், கழிவறைகள் மற்றும் சமையற் கூடங்கள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல், ஊராட்சி பொது நிதியிலிருந்து ₹3.40 கோடி மதிப்பில் 190 பள்ளி கட்டிடங்கள் சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. கனிமவள திட்டத்தின் கீழ் ₹11.40 லட்சம் மதிப்பில் 3 பள்ளி கட்டிடங்கள் பழுது நீக்கம் செய்யப்படுகிறது. அதன்படி, மாவட்டம் முழுவதும் பல்வேறு நிதிகளின் மூலம் ₹9.24 கோடி மதிப்பீல் 595 பள்ளிக்கட்டிடங்கள் பழுது நீக்கம் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன.

இந்த பணிகள் நடைபெறும் பள்ளி கட்டிடங்களை, இரண்டு நாட்களுக்குள் நேரடி ஆய்வு செய்து, அதன் முன்னேறறம் குறித்து அதிகாரிகள் அறிக்கை அளிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், அனைத்து பள்ளிக் கட்டிடங்கள், கழிவறைகள், சமையற்கூடங்கள் பழுது நீக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்கள், இதர கட்டடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும். அதன் விபரங்களை, உடனுக்குடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.அதேபோல், மாவட்டம் முழுவதும் 123 ஏரிகள், குளங்கள் சீரமைக்கும் பணிகளில் இதுவரை 52 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் உத்தரவிட்டு பேசினார்.

Comments