‘கல்யாணத்துக்கு பிறகும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும்’ - மணப்பெண்ணிடம் நண்பனுக்காக அக்ரீமெண்ட் போட்ட நண்பர்கள்

மதுரை: உசிலம்பட்டியில் திருமணத்திற்கு பிறகும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என ஒப்பந்தம் போட்ட ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர்பகுதிக்கு உட்பட்ட  கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத்., தேனியில் உள்ள தனியார்  பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக உள்ள இவர் கிரிக்கெட் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகிறது. இவர்களது கிரிக்கெட் அணியான சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள ஹரிபிரசாத்-க்கும், தேனியைச் சேர்ந்த பூஜா என்பவருக்கும் நேற்று உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.


இந்த திருமணத்தின் போது பத்திரத்துடன் வந்த மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணை திருமணத்திற்கு பின்னரும் கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மணமகன் கிரிக்கெட் விளையாட மணமகள் சம்மதம் தெரிவிப்பது போன்று சம்மத பத்தரத்தில் கையெழுத்திட வைத்து திருமண விழாவை கலகலக்க வைத்தனர். இந்த சம்பவம் திருமணத்திற்கு வந்த உறவினர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Comments