சீனா, ஆப்கானில் நிலநடுக்கம்: 6 பேர் பலி; 20க்கும் மேற்பட்டோர் காயம்

அசதாபாத்: ஆப்கானிஸ்தானின் கிழக்கு குனார் மாகாணம் நோர்கல் மாவட்டம் மசார் தாரா பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 6 பேர் பலியானதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இயற்கை பேரிடர் மேலாண்மை மாகாணத் தலைவர் எஹ்சானுல்லா எஹ்சான் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் மசார் தாரா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்தன. முதற்கட்ட விசாரணையில் 6 பேர் பலியானதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் கிடைந்துள்ளது. மொத்த  சேதங்களின் சரியான எண்ணிக்கையை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும் உணரப்பட்டது’ என்றார்.

அதேபோல் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. ஆனால், பாதிப்புகள், உயிர்சேதம் குறித்த விபரங்கள் தெரியவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு, லூடிங்கிற்கு அருகிலுள்ள யான் நகரில் 4.2 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments