நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி; சிலிண்டர்களில் ‘மோடி ஜி ரூ.1,105’: தெலங்கானாவில் வைரல் வீடியோ

திருமலை: காஸ் சிலிண்டர் மீது பிரதமர் மோடி சிரித்தப்படி உள்ள  படத்தில் ‘மோடி ஜி ரூ.1105’ என்று எழுதப்பட்ட கிண்டல் வாசகம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம்,  காமரெட்டி மாவட்டம், பீர்குரு பகுதியில்  உள்ள ரேஷன் கடையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, ஒன்றிய அரசு இலவசமாக அரிசியை வழங்கும் நிலையில், ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஏன் வைக்கவில்லை?  என  மாவட்ட கலெக்டரிடம் கேட்டார். இது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.


இந்நிலையில், மக்களுக்கு விநியோகிப்பதற்காக ஆட்டோவில் ஏற்றி செல்லப்பட்ட காஸ் சிலிண்டர்களில்  பிரதமர் மோடி சிரித்தப்படி உள்ள  படத்தில், ‘மோடி ஜி ரூ.1105’ என்று எழுதப்பட்டுள்ள வீடியோ காட்சி, சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. இதை வைத்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். நிர்மலா சீதாராமன் கேட்ட 24 மணி நேரத்துக்குள், பிரதமரின் புகைப்படங்கள் சிலிண்டரில் போடப்பட்டு இருப்பதாக கூறி வருகின்றனர். மோடி பிரதமரான பிறகு பெட்ரோல், டீசல், காஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. காஸ் சிலிண்டர் விலை ரூ.400ல் இருந்து ரூ.1,100 ஆக உயர்ந்்துள்ளது. இதை சுட்டிக்காட்டும் வகையில், சிலிண்டரில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த விலையை உயர்த்திய பெருமை மோடிக்கே உரியது  என ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) விமர்சிக்கும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

Comments