மோடியின் கடைசி முழு பட்ஜெட் அக்.10-ல் தயாரிப்பு பணி துவக்கம்; வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கு முன்பாக மோடி அரசு தாக்கல் செய்ய உள்ள முழு பட்ஜெட்டுக்கான தயாரிப்பு பணிகள், வரும் அக்டோபர் 10ம் தேதி முதல் தொடங்குகிறது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜ 2வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதன் பிறகு, இதுவரையில் ஒரு இடைக்கால பட்ஜெட்டுடன் சேர்த்து மொத்தம் 5 பட்ஜெட்டுகளை இவருடைய அரசு தாக்கல் செய்துள்ளது. இவற்றை எல்லாம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், 2024ம் ஆண்டு ஏப்ரலில் மக்களவை தேர்தல் நடக்கிறது. அதற்கு முன்பாக, அடுத்தாண்டு பிப்ரவரி 1ம் தேதி தனது கடைசி முழு பட்ஜெட்டை மோடி அரசு தாக்கல் செய்ய உள்ளது. இதையும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே தாக்கல் செய்கிறார்.


கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொருளாதாரமும் கடுமையாக பாதித்துள்ளது. ஆனால், இந்திய பொருளாதாரம் மெல்ல  மீண்டு வருகிறது.   
அதிக பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, புதிய வேலைகளை உருவாக்குவது, பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து 8 சதவீதத்துக்கு மேல் நீடிக்க செய்வது உள்ளிட்ட நோக்கத்துடன் அடுத்தாண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட உள்ளது. இதன் தயாரிப்பு பணிகள் அடுத்த மாதம் 10ம் தேதி துவங்குகிறது. இதில், பொருளாதார நிபுணர்கள், அனைத்து துறைகளையும் சேர்ந்த உயரதிகாரிகள், ஒன்றிய அமைச்சர்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டுக்கான திட்டங்கள், துறைகளுக்கான செலவுத் தொகை போன்றவை இந்த கூட்டங்களின் போது முடிவு செய்யப்படும்.

Comments