ஜெர்மனி கொலோன் பல்கலை-யின் தமிழ் பிரிவு மூடப்படாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா கோரிக்கை

சென்னை: ஜெர்மனி கொலோன் பல்கலை-யின் தமிழ் பிரிவு மூடப்படாமல் இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மனியில் பழம்பெருமை வாய்ந்த கொலோன் பல்கலை.யில் இந்தியவியல் துறையில் தமிழ் பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ் பிரிவில் 50,000க்கும் மேற்பட்ட பழமையான தமிழ் நூல்களும், ஓலைச்சுவடிகளும் உள்ளன. நிதிச்சுமை காரணமாக 2020-ல் இந்த பிரிவு மூடும் சூழ்நிலை உருவானது.


இதனை மனிதநேய மக்கள் கட்சி தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாலும், வெளிநாட்டு வாழ் தமிழ் ஆர்வலர்களின் உதவியாலும் தமிழக முதலமைச்சர் அளித்த 1.25 கோடி ரூபாய் வழங்கி பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவு காப்பாற்றப்பட்டது. தற்போது, மீண்டும் நிதிச்சுமை காரணமாக தமிழ் பிரிவு மூடப்படும் ஆபத்தில் இருப்பதாக வெளியான செய்தி பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் பிரிவை காப்பதற்கு ஒரு நபரை நியமிப்பதுடன் நிதி உதவி வழங்கி தமிழுக்கான இருக்கையை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்

Comments