தூக்கமின்மை.. பல நோய்களின் அறிகுறி

இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம், இதுதான் எங்கள் உலகம்… இது தான் நகரங்களின் இன்றைய நிலை. இப்போது கிராமங்களில் கூட இப்படியான கலாசார மாற்றம் தலைதூக்க துவங்கியுள்ளது. நல்ல இரவில் இனிய கனவுகள் காண தூங்கும் நிலை போய், கனவுகள் நிறைவேறாமல் தூங்கா நிலையில் இப்போது பலரும் தவித்துவருகின்றனர். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால் அதில் மூன்றில் ஒரு பங்கை நாம் தூக்கத்திற்கு ஒதுக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் ஏழு மணி நேரமாவது தூங்க வேண்டும்.

மின்சாரம் இல்லாத போது சூரியனோடு நாம் நமது வாழ்வியலை அமைத்திருந்தோம். ஆனால் தற்போது இரவு 10, 11 ஏன் நள்ளிரவு தாண்டியும் சிலர் தூங்காமல் டிவி, மொபைல், அவுட்டிங் என பொழுதை கழிக்கின்றனர். இந்தியாவில் 30% மக்கள் 'இன்சோம்னியா' எனும் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுவதாகக் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனாவுக்குப் பிறகு, 10 பேரில் 3 பேருக்கு இந்த நிலை உள்ளது.

இன்சோம்னியா என்றால் என்ன?
தூக்கமின்மை (இன்சோம்னியா) என்பது உடலுக்குத் தேவையான அளவு தூங்கமுடியாமல் இருக்கும் ஒரு நோயின் அறிகுறி. நம் உடல் வளர்ச்சிக்குத் தூக்கம் மிகவும் முக்கியம். குறிப்பாக உடலின் வளர்ச்சிக்குக் காரணமான ஹார்மோன்கள் இரவில்தான் சுரக்கும். இதனாலேயே மருத்துவர்கள் 6-8 மணிநேரம் அவசியம் தூங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

யாருக்கெல்லாம் வரும்:

பொதுவாக 30 வயதுக்கு மேல் உள்ள ஆண், பெண் இருவருக்குமே தூக்கமின்மை பிரச்னை வருகிறது. இதற்கு மனஅழுத்தம், மனச்சோர்வு, செரிமானப் பிரச்னை ஆகியன தூக்க சுழற்சி முறைகளை சிதைக்கும் காரணிகளாக இருக்கிறது. மேலும் உடலில் சர்க்கரை, ரத்தஅழுத்தம், அடிக்கடி தலைவலி பிரச்னை உள்ளவர்களுக்கு இவை அதிகம் காணப்படுகிறது.

தூக்கமின்மை காரணங்கள்:


• தூக்கமின்மைக்கு முதல் காரணம் நாம் சரியான உடல் இயக்கம் இல்லாமல் இருப்பது. விவசாயம், வீட்டு வேலை செய்பவர்கள் போல், உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களை பார்த்தால் அது புரியும், அவர்கள் படுத்தவுடன் தூங்கிவிடுவார்கள்.
• தூக்கம் வரவில்லை என அதிக நேரம் டிவி, மொபைல் பார்த்துக்கொண்டிருந்தாலும் பிரச்னைதான். அவை உங்கள் மூளையை அமைதியாக்கவிடாமல் தூக்கத்தை கெடுக்கும்.
• வயிறுமுட்ட இரவு நேரத்தில் அதிகமாகச் சாப்பிட்டாலோ, அதிக காரம் உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டாலோ, செரிமானக்கோளாறு, வயிற்று உப்புசம் போன்றவகளை உண்டாக்கி, தூக்கத்தை பாதிக்கும்.
• மனஅழுத்தம், மன உளைச்சலுடன் இருந்தாலும் தூக்கம் வராது.
• பெரிய நோய்கள், வலிகள் உள்ளவர்களுக்கு தூக்கம் அவ்வளவு எளிதில் வராது.
• ஆஸ்துமா, சளி பிரச்னை இருந்தாலும் தூக்கம் பாதிக்கப்படும்.

பகலில் தூங்க வேண்டாம்:

• தினமும் காலை, அல்லது மாலையில் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
• இரவு உணவிற்கு பிறகு சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
• மதியம் 5 மணிக்கு மேல் டீ, காபி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
• கண்டிப்பாக இரவில் டிவி, மொபைல் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
• இரவு தூங்கச் செல்வதற்கு 2 மணிநேரதிற்கு முன்பாகவே லேசான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நல்ல வாழ்வியல் முறை என்பது நாம் வகுத்து கொள்வதே. தூக்கத்தின் அவசியத்தை உணர்ந்து யோகா, தியானம், நடைப்பயிற்சி போன்ற, வாழ்வியலை சிறப்பாக்கும் பயிற்சிகளை மேற்கொண்டால், ஆழ்ந்த உறக்கம் சாத்தியம்.

Comments