அதிக மக்கள் தொகை : சீனாவை மிஞ்சும் இந்தியா..! ஐ.நா தகவல்

”2023ம் ஆண்டுக்குள், உலக மக்கள் தொகை எண்ணிக்கையில், நம் அண்டை நாடான சீனாவை இந்தியா விஞ்சும்” என ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று உலக மக்கள்தொகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 1987ம் ஆண்டில் ஜூலை 11ம் தேதி கணக்கீட்டின்படி உலக மக்கள் தொகை 500 கோடியாக அதிகரித்தது. மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா இதனை கடைப்பிடித்து வருகிறது.

முதன்முதலாக, 1990ம் ஆண்டு உலகம் முழுவதும் 90 நாடுகளில், உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நவம்பர் 2021 புள்ளிவிவரங்களின்படி, உலகளவில் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை 790 கோடியாக உள்ளது. கடந்த சில நூற்றாண்டாக மக்கள் தொகை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சமீபத்திய ஐ.நா அறிக்கையின்படி, இந்தியாவின் மக்கள் தொகை 141.2 கோடியாக உள்ளது. சீனாவின் மக்கள் தொகை 142.6 கோடியாக உள்ளது. அடுத்தாண்டு, அதாவது 2023ல் மக்கள் தொகை எண்ணிக்கையில் , சீனாவை இந்தியா முந்துமென தெரிவித்துள்ளது. மேலும், 2050ம் ஆண்டு இந்தியாவின் மக்கள்தொகை 166.8 கோடியாக உயருமெனவும், அப்போது சீனாவின் மக்கள் தொகை 131.7 கோடியாக இருக்குமெனவும் கணித்துள்ளது.

உலக மக்கள்தொகை தினத்தை ஒட்டி ஐ.நா பொதுச்செயலர் அன்டோனியா குட்டரெஸ் வெளியிட்டுள்ள செய்தியில், "உலக மக்கள்தொகை தினத்தில், ஒவ்வொரு நபரின் மீதும் கவனம் செலுத்துவோம். நமது உலகம் நமது தேவைகளையும் எதிர்கால சந்ததியினரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்பதை உறுதி செய்வோம். மனித உரிமைகளைப் பாதுகாப்பதோடு, யாரையும் விட்டுவிடாமல்,அனைத்து தனிநபர்களும் குழந்தைகளை பெற்று கொள்வது எப்போது என தேர்ந்தெடுக்க வாய்ப்புகளை வழங்குவோம்” என பதிவிட்டுள்ளார்.
2022ம் ஆண்டு கணக்கீட்டின்படி, அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியா 2வது இடத்தில் உள்ளது. பிரிட்டிஷ் கடல் பிராந்தியத்தின் ஒரு பகுதியாக உள்ள பிட்காய்ர்ன் தீவு, 40 பேர் கொண்ட குறைந்த மக்கள்தொகை கொண்ட பகுதியாக உள்ளது. நாடுகள் அடிப்படையில் பார்த்தோம் எனில், வாட்டிகன் நகரம், 825 பேர் வசிக்கும் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. 1. ஜப்பானின் டோக்கியா நகரம், 37 மில்லியன் மக்களுடன், அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக விளங்குகிறது.

2. நம் அண்டை நாடான நேபாளம், அதிக பெண்கள் வாழும் நாடாக (1 கோடியே 57 லட்சத்து 88 ஆயிரம் பேர்) உள்ளது.

3. 2018ம் ஆண்டு ஐ.நா புள்ளிவிவரப்படி, உலகம் முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் 250 குழந்தைகள் பிறக்கின்றனர்.

4. 2045 - 2055ம் ஆண்டுக்கு இடையில், மனிதர்கள் சராசரி ஆயுட்காலம், 77 ஆண்டுகளாக உயருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Comments