மூன்று அலைகள் கடந்துவிட்டன. முதல் அலையைக் காட்டிலும், இரண்டாவது அலை, கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தடுப்பூசி காரணமாக, மூன்றாவது அலையை எளிதாக, பெரும் பாதிப்பின்றி கடக்க முடிந்தது.
கொரோனா, திருப்பூர் மாவட்டத்திற்குப் பொருளாதார ரீதியாக ஏற்படுத்திய பாதிப்புகள், இன்னும், பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. தற்போது, தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.வெளி மாவட்டம், வெளி மாநிலத்தினர் நிறைந்த திருப்பூரில், தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சமூக இடைவெளி, முககவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படாத நிலையில், தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மென்மேலும் அதிகரித்துள்ளது.கடந்த இரண்டாவது அலையைப் போல், கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அதிகளவில் இல்லை; சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் மட்டும் உள்ளனர்.
'பூஸ்டர்' முக்கியம்
தடுப்பூசியைப் பொறுத்தவரை, முதல் தவணைத் தடுப்பூசியைப் பெரும்பாலானோர் செலுத்திக்கொண்டிருந்தாலும், இரண்டாவது தவணைத் தடுப்பூசியை, பலர் இன்னும் செலுத்தாமல் உள்ளனர். பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்துமாறு அரசு வலியுறுத்தி வரும் நிலையில், இரண்டாவது தடுப்பூசி செலுத்துவதிலேயே பலரும் தாமதப்படுத்துவதை, கவலைக்குரிய விஷயமாக, சுகாதாரத்துறையினர் கருதுகின்றனர்.'தொற்றுக்கு மிகப்பெரிய பாதுகாப்பாக தடுப்பூசி உள்ளது. முதல் தவணை 95 சதவீதத்தினருக்கும், இரண்டாம் தவணை 85 சதவீதத்தினருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி கடந்த மாதத்துக்கு முன்பு வரை 88 சதவீதமாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் தடுப்பூசி செலுத்தப்பட்டதுதான். தடுப்பூசி செலுத்தி ஓராண்டை கடந்தவர்களுக்கு நோய் எதிர்ப்புசக்தி படிப்படியாகக் குறைகிறது. மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் பூஸ்டர் தவணை தடுப்பூசியை உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும்,' என்று, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்திருக்கிறார்.
விழிப்புணர்வு அவசியம்
தன்னார்வலர்கள் சிலர் கூறுகையில், 'தொற்றின் பரவல் இருந்தபோதும், அது தற்போது கடுமை காட்டவில்லை. அதற்காக அலட்சியம் காட்டுதல் கூடாது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், கைகளைக் கழுவுதல், தடுப்பூசி செலுத்துதல் போன்றவை குறித்து மீண்டும், விழிப்புணர்வைத் தீவிரப்படுத்துதல் அவசியமாகிறது,' என்றனர்.
தொழில்துறையினர் கூறுகையில்,'தொற்றின் பரவல் அதிகரித்துவந்தாலும், முன்பு போன்ற கடுமை இல்லாதது, ஆறுதல் அளிக்கிறது. எந்த சவாலான சூழல்கள் வந்தாலும், அதற்கேற்ப தயாராக வேண்டும். தொழில் கூடங்களில், தொற்று தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. தொழிலாளர்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். கவனத்துடன் செயல்பட்டால், புதிய அலை ஏற்படாமல் கொரோனாவை விரட்டியடிக்க முடியும்,' என்றனர்.
Comments
Post a Comment