![]() |
மதுரை : "இளைஞர்கள் வேலை கொடுப்பவர்களாக மாறவேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கனவு," என மத்திய இணை அமைச்சர் முருகன் பேசினார்.
மத்திய அமைச்சர் முருகன் பேசியதாவது: தமிழர்களின் மனித வளம் ஆற்றல் மிக்கது. பல்வேறு துறைகளில் தமிழர்கள் தனித்த அடையாளமாக விளங்குகின்றனர். தமிழ் மொழியின் சிறப்பை பிரதமர் மோடி உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். ஐ.நா.,வில் தமிழில் பேசிய பின் தான் அவரது உரையை துவக்கினார். 75வது சுதந்திர தினவிழாவை கொண்டாட்டத்தை முன்னிட்டு வாரணாசி பல்கலையில் பாரதியார் இருக்கை ஏற்படுத்தி பெருமை சேர்த்தார்.
இன்றைய இளைஞர்கள் இந்தியாவை உலக அளவில் எடுத்துச்செல்ல வேண்டும். அவர்கள் வேலை தேடுபவராக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கனவு. உலகில் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையிலும் நம் நாடு பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்கிறது. திறமை வாய்ந்த இளைஞர்கள் உலக அளவில் தங்கள் திறமையை கொண்டுசெல்ல வழி ஏற்படுத்திக்கொடுக்கும் திட்டங்கள் இங்கு உள்ளன.
'மேக் இன் இந்தியா' உள்ளிட்ட திட்டங்கள் மூலம் உட்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகள் வளர்ச்சியடைந்து வருகின்றன. 2047ம் ஆண்டில் முன்னேறிய நாடுகளில் நாம் முன்னிலையில் வகிப்போம். தேசிய கல்விக் கொள்கை தாய்மொழி வழிகற்றலை ஊக்குவிக்கும், என்றார்.
துணைவேந்தர் குமார் வரவேற்றார். சிண்டிகேட் உறுப்பினர்கள் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, வாசுதேவன், நாகரத்தினம், தங்கராஜ், பதிவாளர் சிவக்குமார், தேர்வாணையர் தர்மராஜ் பங்கேற்றனர். முனைவர், இளங்கலை, முதுகலை என 1,33,091 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது
Comments
Post a Comment