சென்னை : 'கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் செலவு அதிகரிப்பதால், வீடுகள் விலையை அடுத்த மூன்று மாதங்களில் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்த்தப்படும்' என, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'கிரெடாய்' சென்னை பிரிவு நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கிரெடாய் சென்னை பிரிவு தலைவர் சிவகுருநாதன், செயலர் கீர்த்திவாஸ், பொருளாளர் முகமது அஸ்லாம் பக்கீர் ஆகியோர் கூறியதாவது: கொரோனா மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்ந்துள்ளதால், சொந்த வீடு வாங்க நினைக்கும் மக்கள் விசாரிக்க துவங்கி உள்ளனர். இதனால், புதிய வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. கட்டுமான பணிகள் முடிந்து விற்காமல் தேங்கிய வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில், ஜன., முதல் ஜூலை வரையிலான காலத்தில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 7,064 வீடுகள் விற்பனையாகி உள்ளன. இதில், கிரெடாய் உறுப்பினர்களின் திட்டங்களில் 6,097 வீடுகள் விற்பனையாகி உள்ளன. இதே காலத்தில், புதிதாக அறிவிக்கப்பட்ட 6,846 வீடுகள் அடங்கிய திட்டங்களில், கிரெடாய் உறுப்பினர்களின் திட்டங்களில் 5,002 வீடுகள் அடங்கி உள்ளன.முன் எப்போதும் இல்லாத வகையில், கட்டுமான பொருட்கள் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த, 2017ல் ஒரு கிலோ 37 ரூபாய்க்கு விற்ற டி.எம்.டி., கம்பிகள் விலை தற்போது, 82 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சிமென்ட் விலை 28 சதவீதம்; செங்கல் விலை 12 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒரு சதுர அடிக்கான குறைந்தபட்ச கட்டுமான செலவு 2,000 ரூபாயில் இருந்து 2,300 ரூபாயாக உயர்ந்துள்ளது.கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, அதிகபட்ச பதிவு கட்டணம், ஜி.எஸ்.டி., ஆகியவற்றால் ஏற்படும் சுமைகள் அதிகரித்துள்ளன. இதனால், வேறுவழி இல்லாத நிலையில், வீடுகள் விலை அடுத்து வரும் மூன்று மாதங்களில், 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது.
கட்டுமான நிறுவனங்களின் திட்டங்கள், அவற்றின் வசதிகளுக்கு ஏற்ப இந்த விலை உயர்வு அமையும். எனவே, மக்கள் உடனடியாக வீடு வாங்குவது நல்லது.கட்டுமான பணிகள் முடியும் வரை காத்திருக்காமல், புதிய திட்டங்கள் அறிவித்த நிலையில், மக்கள் வீடு வாங்க முன்வந்தால் கட்டுமான நிறுவனங்கள் விரைந்து செயல்பட வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Comments
Post a Comment