2,235 ஏக்கர் நிலங்கள் கோவில் பெயரில் மாற்ற காத்திருப்பு!; வருவாய் துறை நடவடிக்கை வேகமெடுக்குமா?

காஞ்சிபுரம் - செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கோவிலுக்கு சொந்தமான 2,235 ஏக்கர் நிலங்கள், கோவில் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய காத்திருக்கின்றன. அவ்வாறு மாறினால், கோவிலுக்கு அதிகப்படியான வருவாய் கிடைத்து, பல வசதிகள் மேற்கொள்ளப்படும்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான 1,300க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.இக்கோவில்களுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், கட்டடங்கள், வீட்டு மனைகள் உள்ளன.உத்தரவு


கோவில்களில் முறையாக பூஜைகள், விழாக்கள் நடத்த வழங்கப்பட்ட இந்நிலங்கள், முறையாக பராமரிக்காததால், முறைகேடாக பெயர் மாற்றம் செய்து விற்கப்படுகிறது.இதை தடுக்கும் வகையில், கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்ய, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அறநிலையத் துறை கமிஷனர் உத்தரவிட்டார்.அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களுக்கு, நிலங்கள், மனைகள் மற்றும் கட்டடங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றின் உரிமையாளர் என்பதற்கு சான்றாக, வருவாய் துறை பட்டா, கோவில் பெயரில் இருக்க வேண்டும்.பெரும்பாலான நிலங்களுக்கு, கோவில் பெயரில் பட்டா இல்லை என்று தெரிகிறது. இதை பயன்படுத்தி, பிற நபர்கள், தங்களது பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து, பட்டா பெற்றுள்ளனர்.கோவில் நிலங்களை பாதுகாக்கும் வகையில், கோவில் பெயருக்கு உடனடியாக பட்டா பெற வேண்டும். இதில் பிரச்னை இருந்தால், மாவட்ட வருவாய் அலுவலருக்கு, மேல் முறையீடு செய்ய வேண்டும். பட்டா பெற விண்ணப்பித்த விபரத்தை தெரிவிப்பதோடு, வருவாய் துறை அலுவலர்களை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து வருவாய் துறை மற்றும் அறநிலையத் துறையினர், கோவில் நிலங்கள் எந்தெந்த பகுதிகளில் உள்ளன என, ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.தற்போது வரை, 150க்கும் மேற்பட்ட ஏக்கர் கோவில் நிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் அடையாள கற்கள் நடப்பட்டுள்ளன.
மேல்முறையீடுதவிர, ஒருங்கிணைந்த மாவட்டத்தில், நில உடைமை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தவறுதலாக, தனி நபர் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடித்து, மாவட்ட வருவாய் அலுவலருக்கு மேல்முறையீடும் செய்யப்பட்டு வருகிறது.இது குறித்து, பெயர் கூற விரும்பாத ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள், கோவில் பெயருக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.வைகுண்ட பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம், கோவிலுக்கு சொந்தம் என, சென்னை நிலவரி திட்ட அலுவலர், சமீபத்தில் உத்தரவிட்டுள்ளார்.இவரது உத்தரவை மேற்கோள்காட்டி, மாவட்ட வருவாய் அலுவலருக்கு விபரங்கள் அனுப்புவோம். இதையடுத்து, கோவில் நிலத்திற்கு பட்டா வழங்கப்படும்.இது போல், இரு மாட்டங்களில் சேர்த்து 2,235 ஏக்கர் நிலம், பட்டா மாறுதலுக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.வருவாய் அலுவலர் மூலம் பட்டா மாற்றம் செய்யப்பட்ட பின், அரசு நிர்ணயித்துள்ள அடிமனை வாடகை வசூல் செய்யப்படும். வருவாய் பெருகினால், அதை வைத்து பல வசதிகள் மேற்கொள்ள முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ஓராண்டில் மட்டும் 42 ஏக்கர் நிலங்கள், கோவில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தவிர, 50.45 ஏக்கர் நிலங்களை, கோவில் பெயரில் மாற்றலாம் என, நில உடைமை திட்ட அலுவலர், வருவாய் துறையினருக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.


வருவாய் அதிகரிக்கும்!

ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நில உடைமை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தவறுதலாக, தனி நபர் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்ட 20 கோவில்களுக்கு சொந்தமான 84.93 ஏக்கர் நிலம் உள்ளது.அதே போல், கணினி சிட்டா மற்றும் பட்டா மாறுதல் சம்பந்தமாக மேல் முறையீடு செய்யப்பட்ட நிலங்கள் 1,096 ஏக்கர் உள்ளன. மொத்தமாக 2,235 ஏக்கர் நிலங்கள், கோவில் பெயருக்கு மாற்றப்பட உள்ளது. பட்டா மாற்ற பணிகளை விரைந்து முடித்தால், கோவிலுக்கு வருவாய் அதிகரிக்கும். அதன் மூலம் பராமரிப்பு, திருப்பணிகள் மற்றும் பிற வசதிகள் செய்ய முடியும்.


பட்டா வழங்க நடவடிக்கை

காஞ்சிபுரத்தில் பரமேஸ்வர வின்னகரம் என அழைக்கப்படும், வைகுண்ட பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சர்வே எண்: 847ல் 8.37 ஏக்கர் நிலம், அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்போருக்கு 1968ம் ஆண்டில் பட்டா வழங்கப்பட்டது. இதை எதிர்த்து கோவில் நிர்வாகம், 1972ல் சீராய்வு மனு தாக்கல் செய்தது. பின், நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி, சென்னை நிலவரி திட்ட அலுவலர் இந்துமதி, வைகுண்ட பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 8.37 ஏக்கர் நிலம், கோவில் பெயருக்கு பட்டா வழங்க உத்தரவிட்டார். இதன் மதிப்பு 150 கோடி ரூபாய். இக்கோவிலுக்கு சென்னை, துலங்கும் தண்டலம், மேல்கதிர்பூர், சிங்காடிவாக்கம் போன்ற பகுதிகளில் நிலங்கள் உள்ளன.

கால தாமதம் ஏன்?

கோவிலுக்கு சொந்தமான நிலங்களை கணக்கெடுத்தபோது, பெரும்பாலான இடங்களில் மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு, 'நோட்டீஸ்' வழங்கி, உரிய காரணம் கேட்ட பின்னரே, வருவாய் துறையினரால், கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்படுகிறது. இது சம்பந்தமான விசாரணைக்கு, குடியிருப்போருக்கு 'நோட்டீஸ்' வழங்கினால், அவர்கள் உரிய நேரத்திற்கு வருவதில்லை; விசாரணை தட்டிக்கழிக்கின்றனர். இதனால் கோவில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக, வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர்.


Comments