திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களோடு நில அபகரிப்பும் சேர்ந்து வருவதாகவும், எங்காவது ஏமாந்தவர்கள் இருந்தால் அந்த நிலத்தை ஆட்டையை போட்டுவிடுவார்கள் என்றும் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க அ.தி.மு.க. ஆட்சியில் எச்சரிக்கை பலகைகள் வைத்தோம். ஆறுகள், தடுப்பணைகளில் எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும். கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த ஏழு பேரின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்துள்ள நிதியுதவியை உயர்த்தி வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ரூபாய் 5 லட்சம் நிதியுதவியை ரூபாய் 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் கஞ்சா, போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் எதனையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. பெட்ரோல்- டீசல் மீதான மாநில வரிக்குறைப்பு குறித்து சட்டசபையில் பேசியும் எந்த பதிலும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களோடு சேர்ந்து வருவது ‛நில அபகரிப்பு'. எங்காவது ஏமாந்தவர்கள் இருந்தால் அந்த நிலத்தை ஆட்டையை போட்டுவிடுவார்கள். அதிமுக - பா.ஜ., உறவில் எந்த விரிசலும் இல்லை. எல்லா துறைகளிலும் ஊழல் செய்வதில் இந்தியாவிலேயே முதன்மையான அரசாக திமுக அரசு உள்ளது. பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து கொள்ளை புறம் வழியாக தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்திருக்கிறது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினாலும் ‛செவிடன் காதில் ஊதிய சங்கு' போலதான் இந்த அரசு செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment