செங்கல்பட்டு மறைமலை நகரில் திமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு செங்கோல் பரிசளிக்கப்பட்டது. கலைஞரின் உருவம் பொருந்திய செங்கோலை முதலமைச்சருக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பரிசாக வழங்கினார். பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; திமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்தவே உத்தரவிடப்பட்டது; ஆனால், இங்கு வந்து பார்த்தபோது பொதுக்கூட்டம் மாநாடாகவே காட்சியளிக்கிறது; மக்களோடு மக்களாக நம்மை இணைப்பது இதுபோன்ற பொதுக்கூட்டங்கள்தான்.
எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதும், கிடைக்க வைப்பதும் தான் திராவிட மாடல் ஆட்சி. தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக உருவாக நான் மட்டும் உழைத்தால் போதாது. இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதே திமுக ஆட்சியின் இலக்கு. திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக பாதாளத்தில் கிடந்த தமிழகத்தை தலைநிமிர வைத்துள்ளோம். கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்தியை மட்டுமே பேச வேண்டும் என்று கூறுகிறார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா.
இந்தியா என்பது இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும்தானா? இன்று இந்த கேள்வியை அனைவரும் கேட்கத் தொடங்கிவிட்டனர். எங்கள் மொழிக்கும் பண்பாட்டிற்கும் தனித்துவம் இருக்கிறது.
Comments
Post a Comment