கள்ளழகர் இறங்கும்.சோழவந்தான் வைகை ஆற்றில் சுகாதாரக் கேடுகண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம் பக்தர்கள் வேதனை

சோழவந்தான்:
மதுரை மாவட்டம், சோழவந்தான் சித்திரை திருவிழாவில் வரும் 16_ஆம் தேதி சனிக்கிழமை அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் வேடம் பூண்டு, ஜெனகை நாராயணபெருமாள் இறங்கும் வைபவம் நடைபெறவுள்ளது. மதுரை சித்திரைத் திருவிழாவை அடுத்து நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவான இந்நிகழ்வில்,  சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் ஒன்று கூடுவர். தற்போது, வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடம் மிகவும்அசுத்தமாக உள்ளது. வைகை ஆற்றில் சாக்கடை கழிவுநீர் கலந்தும் குப்பைகள் கொட்டப்பட்டும் வருகிறது.
 இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஏற்கெனவே, கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த சித்திரை திருவிழா இந்த ஆண்டு  நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதனையொட்டி, சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திருவிழாவுக்கு வர வாய்ப்புள்ளதால் நோய்த்தொற்று ஏற்படும்  வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பேரூராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக அறிவுறுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தை சுத்தப்படுத்த வேண்டும். பெண்களுக்கு போதிய மொபைல் டாய்லெட் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். சுகாதாரக்கேடு நிலவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி பெண்களும், பொது மக்களும், பக்தர்களும் கேட்டுக்கொண்டனர்.
சோழவந்தான் பேரூராட்சியில், திமுகவைச் சேர்ந்த ஜெயராமன் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில், சோழவந்தான் வைகையில் அழகர் இறங்கும் பகுதியை தூய்மைப்படுத்த, சமூக ஆர்வலர்கள், மதுரை மாவட்ட பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கையை ஆவண செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், நடவடிக்கை எடுப்பார் என, இப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Comments