1000 ஆண்டு பழமையான 197 கோயில்களில் தொன்மை மாறாமல் திருப்பணிகள் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
1000 ஆண்டு பழமையான 197 கோயில்களில் தொன்மை மாறாமல் திருப்பணிகள் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை கே.கே. நகர் சக்தி விநாயகர் கோயில் திருமண மண்டபத்தில், குளிர்சாதன வசதி மற்றும் திருப்பணிகளை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். விழாவில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, நிலைக்குழு தலைவர் தனசேகரன், 131வது வட்ட மாமன்ற உறுப்பினர் நிலவரசி துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் 1000 ஆண்டுகள் பழமையான 197 கோயில்களில் தொன்மை மாறாமல் திருப்பணி தொடங்கப்படும், அதேபோல் 100 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது, இப்பணிகள் முடிந்தவுடன் பணிகள் தொடங்கும்.
பரம்பரை அறங்காவலர்கள் உள்ள பண்ணாரி அம்மன் கோயில், பெரிய பாளையத்து அம்மன் கோயில்களில் பணிகள் விரைவில் தொடங்கும். மற்ற கோயில்களில் அறங்காவலர்கள் நியமனத்திற்கு பின்பு இப்பணிகள் தொடங்கும். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான மயில் கடந்த காலங்களில் காணாமல் போனது. அதை கண்டுபிடிக்க தற்போது நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இது சட்டத்தின் ஆட்சி. சட்டத்திற்குட்பட்டு அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது, இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு பேசினார்.
Comments
Post a Comment