ெகாரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டதால் வரும் ஏப்ரல் 4ம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணைகள் நடத்தப்படும் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் முதல் காணொலி மூலம் உச்சநீதிமன்ற விசாரணைகள் நடைபெற்றன. கடந்தாண்டு அக்டோபரில், தொற்று பரவல் குறைந்ததால் புதன் மற்றும் வியாழன் ஆகிய தேதிகளில் பட்டியலிடப்பட்ட வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டன. திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நேரடி விசாரணையும், செவ்வாய்கிழமை பட்டியலிடப்பட்ட வழக்குகள் அல்லது இதர வழக்குகள் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டு வந்தது.
ஒமிக்ரான் தொற்று பரவியதால் கடந்த ஜனவரி 7ம் தேதி முதல் காணொலி காட்சி மூலம் விசாரணைகள் நடத்தப்பட்டன. தொற்று பரவல் குறைந்த நிலையில், கடந்த பிப்ரவரி 14ம் தேதி முதல் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே (திங்கள் மற்றும் வெள்ளி) நேரடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று வெளியிட்ட அறிவிப்பில், ‘வரும் ஏப்ரல் 4ம் தேதி திங்கட்கிழமை முதல் உச்சநீதிமன்றத்தின் அனைத்து வழக்குகளும் நேரடி விசாரணை மூலம் நடைபெறும். வாரத்தில் 2 நாட்கள் மட்டும் நேரடி விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இனிமேல் வாரத்தில் 5 நாட்களும் நேரடி விசாரணை நடக்க உள்ளது. ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்ட கொரோனா முன்னெச்சரிக்கை நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும்’ என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment