இறந்து போன தனது மகளின் உடலை 10 கி.மீ., தோளில் சுமந்து சென்ற தந்தை - விசாரணைக்கு சத்தீஸ்கர் அரசு உத்தரவு !

  ராய்ப்பூர்: இறந்த மகள் உடலுடன் 10 கி.மீ., தூரம் தந்தை நடந்து சென்ற சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டம் அம்தாலா என்ற கிராமத்தை சேர்ந்த ஐஸ்வர் தாஸ் என்பவர் தனது 7 வயதான மகள் சுரேகாவை, நேற்று(மார்ச் 25) லகன்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தீவிர காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுமியை அழைத்து வந்த போது,உடலில் ஆக்ஸிஜன் அளவும் மிக குறைவானதாக இருந்தது. டாக்டர்கள் போதுமான சிகிச்சை அளித்தும், சிறுமியின் உடல்நிலை மோசமடைந்து காலை 7: 30 மணியளவில் உயிரிழந்தார். இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்த டாக்டர்கள், உடலை ஏற்றி செல்லும் வாகனம், 9:20 மணிக்கு வரும் என தெரிவித்தனர். ஆனால், அதுவரை பொறுமை காக்காத இஸ்வர் தாஸ், மகளின் உடலை தோளில் போட்டு, 10 கி.மீ., தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்தவாறே கொண்டு சென்றார்.  
இதனை சிலர் படம்பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அங்கு, அது வைரலாக பரவ துவங்கியதை தொடர்ந்து மாநில சுகாதார அமைச்சர் டிஎஸ் சிங் தியோவின் கவனத்திற்கும் சென்றது. அந்த நேரத்தில் சர்குனா மாவட்ட தலைமையிடமான அம்பிகாபுர் என்ற இடத்தில் இருந்த அவர், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். அம்பிகாபுர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக அமைச்சர் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments