பா.ஜ, வுக்கு திரும்பிய ஜெயலலிதா ஆதரவு ஓட்டுக்கள்

 


சென்னை : அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்தவர்கள் பார்வை, தற்போது பா.ஜ., பக்கம் திரும்பியுள்ளதை தான், இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது: பா.ஜ., பிராமண சமூகத்தினரின் கட்சி என்று, திராவிட கட்சிகள் கூறுகின்றன. ஆனால், பா.ஜ., அனைத்து சமூக மக்களையும் சமமாக கருதும் கட்சி. படித்தவர்கள், தி.மு.க.,வின் ஹிந்து எதிர்ப்பை விரும்பாதவர்கள், ஊழலை வெறுப்பவர்கள் பா.ஜ., ஆதரவாளர்களாக உள்ளனர்.அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு சரியான தலைமை இல்லாமல் இருந்தது.

இதனால், பா.ஜ., ஆதரவு மனப்பான்மை உள்ளவர்கள், தங்களின் ஓட்டுக்களை, பா.ஜ.,வுக்கு போட்டாலும் வெற்றி பெற போவதில்லை என்று கருதி, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இது, அ.தி.மு.க.,வினருக்கும் தெரியும்.பா.ஜ., ஆதரவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போட்டியிட்டால், அந்த ஓட்டுக்கள் சிதறாமல் அப்படியே கிடைக்கும் என கருதி, அ.தி.மு.க.,வினர் போட்டியிட ஆர்வம் காட்டுவர்.


latest tamil news


ஜெயலலிதா மறைவுக்கு பின், அக்கட்சிக்கு சரியான தலைமை இல்லாமல் போனது. அதேசமயம், தமிழக பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை, ஜெயலலிதாவின் அதிரடி பாணியை பின்பற்றி, கட்சியை பலப்படுத்தி வருகிறார். அவர், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.க.,விடம் கேட்ட இடங்கள் கிடைக்காத நிலையில், தொடர்ந்து பேச்சு நடத்த ஆர்வம் காட்டவில்லை.

கட்சியை பலப்படுத்த, எந்த நிலையில் கட்சி இருக்கிறது என்பதை அறிய, தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இந்த முடிவை, பா.ஜ., மூத்த நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் பலர் விரும்பாத நிலையில், தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. கட்சி அறிவித்த வேட்பாளர்களின் வெற்றிக்காக, தொண்டர்கள் தீவிரமாக களப் பணியாற்றினர்.

'தேர்தல் பணியாற்றாத நிர்வாகிகள் மாற்றப்படுவர்' என்று எச்சரித்ததால், அவர்களும் களத்தில் தீவிரம் காட்டினர்.இதனால், பா.ஜ., தொண்டர்கள், அவர்களின் குடும்பத்தினர் ஓட்டுக்கள் முழுதுமாக கிடைத்தன. இது தவிர, தங்களின் ஓட்டு வீணாகக் கூடாது என்பதற்காக, ஜெயலலிதா இருந்த வரை அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்த பா.ஜ., ஆதரவாளர்களும் தற்போது, பா.ஜ.,வின் தாமரை சின்னத்திற்கு ஓட்டளித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் ஆயுள் காப்பீடு, விவசாய ஊக்கத்தொகை, இலவச காஸ் இணைப்பு, இலவச வீடு உள்ளிட்ட திட்டங்களால் பயனடைந்தவர்களும் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தனர்.முந்தைய தேர்தல்களில் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்த, பொது வாக்காளர்கள் பார்வையும், பா.ஜ., மீது திரும்பி இருக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments