தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு...

சென்னை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போர், தங்கள் வீடுகளுக்கு அருகே உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் தொடங்கி விட்டது. இந்த நிலையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி, டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 


தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் உள்ளன. இவற்றில் 1,500-ல் இருந்து 2 ஆயிரம் துப்பாக்கிகள் வரையில் வங்கி பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

தேர்தல்கள் நடைபெறும் போது உரிமம் பெற்ற துப்பாக்கிகளை போலீசாரிடம் ஒப்படைப்பதற்கு உத்தரவிடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்து இருப்பவர்கள் அதனை தங்களது பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்  என சுற்றறிக்கை வாயிலாக, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி போலீஸ் கமிஷனர்கள், துணை மற்றும் உதவி கமிஷனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும். 'இவர்களிடம் துப்பாக்கிகளை பெற்று, அதற்கான ரசீது வழங்க வேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களை தவிர, மற்றவர்களிடம், துப்பாக்கி ஒப்படைக்க கூறுவதன் நோக்கம் குறித்து தெரிவிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

இதன்படி உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அதனை ஒப்படைத்து வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் உள்ளன. இவற்றில் 1,500-ல் இருந்து 2 ஆயிரம் துப்பாக்கிகள் வரையில் வங்கி பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

இவைகளை தவிர்த்து மீதமுள்ள சுமார் 18 ஆயிரம் துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் 3 ஆயிரம் வரையில் உள்ளது. இவற்றில் 300 முதல் 500 துப்பாக்கிகள் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

இவைகள் போக சுமார் 2,500 துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தங்களது பாதுகாப்பு தேவைகளுக்காக துப்பாக்கிகளை வாங்கி வைத்திருப்பவர்கள் அதனை சென்னை போலீஸ் கமி‌ஷனரக எல்லைக் குட்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைத்து வருகிறார்கள்.

உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைப்பது தொடர்பாக ஆவடி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஆவடி பகுதியில் 317 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் எனவும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பாரம்பரியமாக துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு இதில் விதிவிலக்கு உள்ளது. துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை ஒப்படைக்க தேவை இல்லை. நகை-பணம் எடுத்து செல்ல பாதுகாப்புக்காக வைத்திருக்கும் துப்பாக்கிகளுக்கும் விதிவிலக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                  செய்தி சுந்தர் மகரிஷி

Comments